news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பண வசூல், பூசிமெழுகும் அதிகாரிகள், செய்தியாளரிடம் சீறிய இன்ஸ்பெக்டர்
tv

Also Watch

பண வசூல், பூசிமெழுகும் அதிகாரிகள், செய்தியாளரிடம் சீறிய இன்ஸ்பெக்டர்

"ஏய்... உனக்கு இதே தான் வேலையா?"

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சேலம் குகை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவில் தற்காலிக கடை அமைத்துள்ள சிறு வியாபாரிகளிடம் சிலர் பணவசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்த நிலையில், அதனை நியூஸ் தமிழ் செய்தியாளர் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் உள்ளிட்டோர் பூசி மொழுகியது அதிர வைத்துள்ளது.

வசூலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர், பழைய வழக்குகளை மனதில் வைத்து செய்தியாளரை ஒருமையில், மிரட்டும் தொனியில் பேசியுள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பண வசூல் உண்மை தான்
சேலம் மாநகர் குகைப் பகுதியில் உள்ள மாரியம்மன் காளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைப்பது வழக்கம். அவர்களிடம், கோவில் நிர்வாகம் என்ற பெயரில் ஒரு பேட்ஜை மாட்டிக்கொண்டு தவெகவை சேர்ந்த குகை பகுதி செயலாளர் பாலாஜி, செயற்குழு உறுப்பினர் யுவராஜ் உள்ளிட்டோர் சிறிய கடைகளுக்கு ஒரு தொகை, பெரிய கடைகளுக்கு ஒரு தொகை என பணம் வசூலிப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பிறகு அங்கு சென்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் சிலம்பரசன், வியாபாரிகளிடம் விசாரித்தார். அப்போது, பணம் வசூலிப்பது உண்மைதான் என அவர்கள் கூறியதோடு மஞ்சள் நிற ரசீதையும் காட்டி உள்ளனர்.

வியாபாரிகளிடமா வசூலில் ஈடுபட வேண்டும்?
இதனை தொடர்ந்து, கோவில் அலுவலகத்திற்கு சென்ற செய்தியாளர் செயல் அலுவலர் ஸ்ரீ கிருஷ்ணாவிடம், பணம் வசூலிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர், டெண்டர் விடவில்லை எனக் கூறிவிட்டு அமைதியாக இருக்க, கடந்த ஆட்சியில் நடந்தது தற்போதும் தொடர்வதாக கூறிய கோவில் கிளெர்க், தவெக நிர்வாகிகள்தான் வசூலிப்பதாக கூறினார். டெண்டரே விடாமல் தன்னிச்சையாக பணம் வசூலிக்கலாமா? அறநிலையத்துறை பெயரில் தானே ரசீது இருக்க வேண்டும், ஆனால் ரசீது அப்படி இல்லையே? சோறு தண்ணி இல்லாமல் சிறு வியாபாரம் செய்து பிழைக்கும் வியாபாரிகளிடமா வசூலில் ஈடுபட வேண்டும்? என கேள்விக்குமேல் கேள்வி எழுப்பினார் செய்தியாளர் சிலம்பரசன்.

விசாரித்த ஆய்வாளர்
அப்போது, ’சார், இருங்க நானே விசாரிக்கிறேன்,’ எனக்கூறிய இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சசிகலா, செயல் அலுவலர் மற்றும் கிளர்க் இருவரிடமும் சில கேள்விகள் கேட்டதோடு, பேப்பரும், பேனாவையும் எடுத்துக்கொண்டு கடை கடையாக விசாரிக்க சென்றார். தாங்கள் பணம் கொடுத்துள்ளதாக வியாபாரிகள் கூறியபிறகும் சசிகலாவின் பேச்சு பணம் வசூலில் ஈடுபடுபவர்களை காப்பாற்றும்நோக்கில் இருந்தது. அதுகுறித்து கேட்ட செய்தியாளரிடம் சீறிய சசிகலா, நான் யாரு யாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என கிளெர்க்கை நோக்கி சினத்தை கொட்டினார்.

அனல் பார்வை திரும்பியது...
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே மீண்டும் ஒரு இளைஞர்கள் கூட்டம் வியாபாரிகளிடம் பணம் வசூலிக்க ஆரம்பித்தனர். அதனால், மற்றொரு நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத் கோவிலுக்கு சென்று அந்த இளைஞர்களை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பண வசூலில் ஈடுபட்டது யார்? டெண்டரே விடாமல் வசூல் செய்யும் அளவுக்கு தைரியம் வந்தது எப்படி? என்பது குறித்து செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜன் விசாரிப்பார் என எதிர்பார்த்தால் செய்தியாளர் மீதுதான் அவரது அனல்பார்வை திரும்பியது.

அடுத்தடுத்த செய்திகளால்...
’உனக்கு இதேதான் வேலையா?’ என செய்தியாளரை நோக்கி ஆட்காட்டி விரலை நீட்டி ஒருமையில் பேசினார் இன்ஸ்பெக்டர் தேவராஜன். இவரது இந்த கோபத்திற்கு காரணம் ஏற்கெனவே நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது அவருக்கு இருக்கும் ஆத்திரம் தான் என கூறப்படுகிறது. கடந்த 1 வருடத்திற்கு முன்பு பாசிப்பருப்பில் கலப்படம் செய்ததை செய்தி சேகரித்தார் வினோத். அந்த வழக்கை செய்தியாளர் மீதே திசை திருப்பியதாகவும், தேவராஜன் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் ஆடியோ வெளியானது. அதேபோல், கடந்த ஜூலை 6ஆம் தேதி பணி நேரத்தில் தூங்கிய தேவராஜன் தொடர்பான செய்தி நியூஸ் தமிழில் வெளியானது. அதுமட்டுமல்லாது கடந்த சில நாட்களாக சட்ட விரோத மது விற்பனை, லாட்டரி விற்பனை தொடர்பான செய்திகளும் அடுத்தடுத்து வெளியானது.

மிரட்டிய இளைஞர்கள்
இந்த கோபத்தில்தான் வினோத்தை, இன்ஸ்பெக்டர் ஒருமையில் பேசி எகிறியதாக கூறப்படும் நிலையில், பண வசூலில் ஈடுபட்டவர்களிடம் பெயருக்குகூட விசாரணை நடத்தவில்லை. இன்ஸ்பெக்டரின் நடவடிக்கையால் கூடுதல் தெம்பான வசூல்வேட்டை இளைஞர்கள், செய்தியாளரை சுற்றி வளைத்து, உங்கள் ஐடி கார்டு எங்கே? கடந்த ஆண்டு பணம் வசூலித்தபோது ஏன் வரவில்லை? தங்கள் மீது புகார் அளித்தது யார்? தங்கள் வீட்டில் தண்ணீர் வரவில்லை அதனை சரி செய்ய முடியுமா? நீங்கள் பிரஸ் தானே? என அதிகாரிகள் போன்று கேள்விக்குமேல் கேள்வி எழுப்பி மிரட்ட ஆரம்பித்தனர்.

என்ன செய்ய முடியும்?
பண வசூலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கீழே அமர்ந்து செய்தியாளர் தர்ணா செய்தும் இன்ஸ்பெக்டர் தேவராஜன் கண்டுகொள்ளவில்லை. மாறாக இளைஞர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது போன்றுதான் இருந்தது. அதேபோல், பணம் வசூல் செய்தார்கள் என வியாபாரிகளே கூறியும் இன்ஸ்பெக்டர் அதனை காதுகொடுத்துக்கூட கேட்கவில்லை. சுற்றி நின்று கொண்டிருந்த காவலர்களும் துள்ளிய இளைஞர்களை கட்டுப்படுத்தாமல் பொம்மைகள்போன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதுசரி இன்ஸ்பெக்டரே கண்டு கொள்ளாத போது காவலர்கள் மட்டும் என்ன செய்ய முடியும்?

தெளிவு கிடைக்கவில்லை...
இதனிடையே, 2 மணிநேரத்திற்கு பிறகு சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோஷி நிர்மல் குமார் அங்கு வந்தார். அதன்பிறகுதான் அந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்றனர்.

ஆனாலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தனிநபர்கள் வசூலில் ஈடுபட்டது ஏன்? கோவில் நிர்வாகம் பூசி மொழுகுவது ஏன்? இன்ஸ்பெக்டரும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து கடைசிவரை தெளிவு கிடைக்கவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புழல் ஏரிக்கு பெரும் ஆபத்து..!

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved