Also Watch
Read this
By: Fyrose Banu

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு அனுமதியுடன் விவசாயப் பயன்பாட்டிற்காக ஏரியில் வண்டல் மண் அள்ளச் சென்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட விவசாயி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழக அரசு விவசாய மேம்பாடு, தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகப் பல்வேறு நிபந்தனைகளுடன் ஏரிகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ளச் சலுகைகளுடன் கூடிய அனுமதியை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில், போச்சம்பள்ளி வட்டம்
பாளேத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்ற விவசாயி, தனது விவசாய நிலத்தை மேம்படுத்துவதற்காகத் திப்பம்பட்டி ஏரியிலிருந்து வண்டல் மண் மற்றும் களிமண் அள்ளுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

விவசாயியின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம், ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 14 வரையிலான மூன்று நாட்களுக்குக் குறிப்பிட்ட வாகனங்கள் மூலம் 80 கன மீட்டர் மண் அள்ளிக் கொள்ள அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து வட்டாட்சியரின் உத்தரவுப் நகலுடன், ஜேசிபி எந்திரம் மற்றும் டிராக்டர்களுடன் பழனிசாமி திப்பம்பட்டி ஏரிக்கு மண் அள்ளச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர், ஏரியில் மண் அள்ள வேண்டுமானால் தங்களுக்குப் பணம் தர வேண்டும் என்று கூறி வாகனங்களை மறித்து தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதுகுறித்துத் தகவலறிந்த போச்சம்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்தவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட விவசாயி பழனிசாமி போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "திப்பம்பட்டி ஏரியில் உள்ள மண்ணை அள்ளுவதற்கு மறைமுகமாக மண் கடத்தும் கும்பலுக்குத் திப்பம்பட்டியைச் சேர்ந்த ஒரு சிலர் உதவி செய்து வருகின்றனர். அந்த கும்பல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவு நேரங்களில் ஏரியிலிருந்து சட்டவிரோதமாக மண்களைக் கடத்திச் சென்றுள்ளது. ஆனால், விவசாயிகளான நாங்கள் அரசு அனுமதியின் பேரில் சட்டப்பூர்வமாக மண் அள்ளச் சென்றால் எங்களைத் தடுத்து நிறுத்துகின்றனர். மேலும், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்" என்று வேதனையுடன் குற்றஞ்சாட்டினர். இந்த நிலை திப்பம்பட்டி ஏரியில் மட்டுமன்றி, இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் அரசு விதிகளின்படி மண் அள்ளச் செல்லும் அனைத்து விவசாயிகளுக்கும் தொடர்கதையாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஏரியிலிருந்து மண்ணள்ளுவதற்குப் பணம் கேட்டு மிரட்டும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved