Also Watch
Read this
By: Manigandan Raja

மணல் கடத்தி அதிக விலைக்கு விற்பனை :
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்கல் தடுப்பணைப் பகுதியில், போதிய நீர்வரத்தின்றி தென்பெண்ணை ஆறு வறண்டு காணப்படுவதைச் சாதகமாகப் பயன்படுத்தி, சமூக விரோதிகள் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுங்கல், சுண்டகாப்பட்டி, மோட்டூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சில கும்பல்கள், ஆற்றில் தேங்கியுள்ள மணலைச் சிமெண்ட் பைகளில் மூட்டைகளாகக் கட்டிச் சேகரிக்கின்றனர். இவற்றை யாருக்கும் சந்தேகம் வராத வகையில், கழுதைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் மறைவான இடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து டிராக்டர்கள் மற்றும் டிம்பர் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. காவேரிப்பட்டணம் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட இந்தப் பகுதிகளில், காலங்காலமாகத் தங்கு தடையின்றி மணல் கடத்தல் அரங்கேறி வருகிறது.
இதனால் ஆற்றின் இயற்கையான கட்டமைப்பு சிதைந்து, நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது விளைநிலங்களில் நீரின்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமூக விரோதிகளின் இந்தத் தொடர் மணல் கடத்தலால் இயற்கை வளம் சுரண்டப்படுவதோடு, எதிர்கால விவசாயமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இனியாவது இந்தப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு, மணல் கொள்ளைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved