Also Watch
Read this
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே, பாதுகாப்பற்ற குடிசை வீடுகளில் வசித்து வரும் இருளர் இன மக்கள், தங்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் அரசு உடனடியாக இலவசமாக வீடுகள் கட்டித் தரக் கோரிக்கை விடுத்து உள்ளனர். வாழ்வாதாரத்தின் விளிம்பில், வசந்தங்களைக் காணாமல் வாழும் இருளர் இன மக்களின் இந்த அவலக்குரல் பொதுவெளியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இருளர் இன மக்கள்
கூடுதுறைப்பட்டி அண்ணா நகர் பகுதியில் சுமார் 35 இருளர் இனக் குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் நிலையில், சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், இவர்களுக்கென்று தனியாக அரசு சார்பில் இதுவரை எந்தவித வீட்டுவசதியும் செய்து தரப்படவில்லை என்று அப்பகுதி பெண்களும், பள்ளி மாணவர்களும் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். கூடுதுறைப்பட்டி அண்ணாநகர் பகுதி மக்கள் அனைவரும் ஓட்டு வீடுகளிலும், போதிய பாதுகாப்பற்ற குடிசை வீடுகளிலும் வாழ்ந்து வருவதுடன், அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர கூரை இல்லாத காரணத்தினால், ஒவ்வொரு நாளும் பல போராட்டங்களை எதிர்கொண்டு வருவதாக இருளர் இன மக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

மாணவ, மாணவியர் வேதனை
குறிப்பாக, மழைக்காலங்கள் வந்துவிட்டால், இவர்களின் வாழ்வு நரகமாக மாறி விடுவதாகவும், பலவீனமான குடிசை வீடுகள் மழையின் காரணமாக இடிந்து விழுவதும், கூரை வீடுகளில் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்குவதும் வாடிக்கையாகி விட்டதாகவும் குமுறுகின்றனர்.

மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதால், பாடப் புத்தகங்கள் முற்றிலும் நனைந்து விடுவதால், பள்ளிக்கூடக் கட்டிடத்தில் தஞ்சம் புகவேண்டிய நிலை உள்ளதாக மாணவ, மாணவியர் வேதனை தெரிவிக்கின்றனர்.

உறுதி செய்ய வேண்டும்
தற்போதைய நிலையில், பலத்த காற்று அல்லது மழை வீசும்போதெல்லாம் குடிசை வீடுகள் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம் என்ற பயத்திலேயே வாழ்வதாக ஆதங்கப்படும் இருளர் இன மக்கள், இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலமும், அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் தங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு உடனே தலையிட்டு கூடுதுறைப்பட்டி அண்ணாநகர் இருளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved