Also Watch
Read this
By: Admin News Tamil

கடைக்குள் பூட்டிவிட்டு சென்ற மதுப்பிரியர்கள் :
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த சவுளூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் இருந்த ஊழியர்கள் காலி மது
பாட்டில்களை முறையாக திரும்ப பெறவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அந்த டாஸ்மாக் கடைக்கு வந்த மது பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடை இன்று மாலையே மூடப்பட்டது. இதனை அடுத்து அருகில் உள்ள மணியாண்டஹல்லி புதூர் பகுதியில் இருந்த அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் அந்த பகுதியில் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையில் மது வாங்க வந்த சிலர் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்துடன் ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென அந்த கடையின் ஓரத்தில் இருந்த பூட்டை எடுத்து கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு கடைக்கு பூட்டு போட்டதுடன் சாவியையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
டாஸ்மாக் கடையில் இருந்த ஐந்து ஊழியர்கள் கடைக்குள் சிக்கி தவித்ததுடன் அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் காவேரிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு
சென்று டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ஐந்து ஊழியர்களையும் மீட்டனர்.
இந்த நிலையில் அங்கு மது வாங்க குவிந்திருந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகள் முறையாக செயல்படுவதில்லை, குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுவதில்லை எனக்கூறி
காவேரிப்பட்டினம் மணியாண்டஹல்லி சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சாலையில் படுத்து அலப்பறையும் செய்தனர்.
அது மட்டும் இன்றி அங்கிருந்த போலீசாரையும் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கு மேலாக அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை
நடத்தி சமாதானம் செய்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு டாஸ்மாக் கடையில் ஊழியர்களை உள்ளேயே அடைத்து கடையை பூட்டி சென்ற மர்ம நபர்கள் குறித்து தொடர்ந்து காவேரிப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved