Also Watch
Read this
By: Manigandan Raja

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நாடாளுமன்றத்தில் பேச்சு :
இந்தியா நேபாள நிலத்தை ஆக்கிரமித்துள்ளது போல, இந்தியாவின் சில பகுதிகளை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவுடன் எப்போதும் ஒரு சுமுகமான மற்றும் இணக்கமான உறவையே தனது அரசு விரும்புவதாகவும், ஆகவே, பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி வழியிலேயே பிராந்திய எல்லை சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த எல்லை பிரச்சனையின் வேர்கள் பிரிட்டிஷ் காலத்தை சேர்ந்தவை என்பதால், இந்த விவகாரத்தை பிரிட்டன் அரசிடமும் தனது அரசு கொண்டு செல்லும் என்றார்.
சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மேற்பகுதி இடிந்து விபத்து :
சீனாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். யுன்னான் மாகாணம் பைஹு கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் 6 தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேற்பகுதி இடிந்து விழுந்தது.
இதில் நிலக்கரி வெட்டி எடுத்துக் கொண்டிருந்த 6 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சென்ற மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், ஒரு தொழிலாளியை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மற்ற 5 தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.
எதிரியின் வாக்குறுதிகளை ஈரான் நம்புவதில்லை :

எதிரியின் வார்த்தைகளையோ அல்லது வாக்குறுதிகளையோ ஈரான் நம்புவதில்லை என அந்நாட்டின் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஈரான் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவது உறுதியாகும் வரை, அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், எதிரியின் வார்த்தைகள் அல்லது வாக்குறுதிகளை ஈரான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் நம்புவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
காகித ஆலையில் கொள்கலன் வெடித்து ரசாயனக் கசிவு :

அமெரிக்காவில் காகித ஆலையில் கொள்கலன் வெடித்து ரசாயனக் கசிவு ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. வாஷிங்டன் லாங்வியூ பகுதியில் உள்ள காகித ஆலையில், 34 லட்சம் லிட்டர் ரசாயன திரவம் வைக்கப்பட்டிந்த மிகப்பெரிய கொள்கலன் திடீரென வெடித்து சிதறியதில் பெரியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களில் 11 பேர் காணாமல் போன நிலையில், 2 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், மீதமுள்ள 9 பேரின் உடல்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த வெடிபொருட்கள் :

மியான்மரில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 45 பேர் பலியான நிலையில், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசுக்கு எதிராக ஆயுத சண்டையில் ஈடுபட்டு வரும், டாங் தேசிய விடுதலை படையின் கட்டுப்பாட்டில் காங்டப் கிராமத்தில் உள்ள கட்டடத்தில் சுரங்க பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.
இது திடீரென வெடித்ததில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு, அருகிலுள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வெடிவிபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்த மீட்புப் படையினர், பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved