Also Watch
Read this
By: Manigandan Raja

ரூ.36 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்ட சாலை
உத்தரப்பிரதேசத்தில் கனமழையால், 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கங்கா விரைவுச்சாலையில்10 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மீரட் மற்றும் பிரயாக்ராஜ் இடையிலான பயண நேரத்தை வெறும் 6 மணி நேரமாகக் குறைக்கும் வகையில், 594 கிலோமீட்டர் நீளத்தில் இந்த அதிவேக விரைவுச்சாலை அமைக்கப்பட்டது.
இதனை பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார். சாலை திறக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில் 421-வது கிலோமீட்டர் பகுதிக்கு அருகே கனமழையால் சாலையில் 10 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தால் சாலையின் ஒரு பகுதியும், அதையொட்டி அமைக்கப்பட்டிருந்த மண் மேட்டுப் பகுதியும் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் கார்கே அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியின் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்த் ஹண்டோர் உள்ளிட்டோர் மொட்டையடித்தும் யாகம் வளர்த்தியும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் கார்கே பங்கேற்றுப் பேசிய பொதுக்கூட்ட மேடை தீட்டுப்பட்டு விட்டதாக கூறி வலதுசாரி அமைப்பினர் கங்கை நீர் தெளித்து சுத்தம் செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலித் சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான கார்கே அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மட்டுமின்றி பிற கட்சித் தலைவர்களும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் சாதி வெறியை கடுமையாகச் சாடியுள்ளனர்.
JPSC-JSSC தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
தேர்வு முறைகேட்டை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கையை ஏற்று JPSC-JSSC தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ((Hemant Soren)), தேர்வு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டிருந்தால், இத்தகைய முறைகேடுகள் நிகழ்ந்திருக்காது என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved