Also Watch
Read this
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள பார்வதி மருத்துவமனையில் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக அனுமதிக்கப்பட்ட 18 வயது கல்லூரி மாணவி, திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மகளின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனப் பெற்றோர் கதறியதோடு, உடலை வாங்க மறுத்து சாலையில் இறங்கிப் போராடியதால் நள்ளிரவில் குரோம்பேட்டை பகுதியே போர்க்களமாக மாறியது.
ஆசை ஆசையாக பெற்றெடுத்து, பொத்தி பொத்தி வளர்த்த மகளை எதிர்பாராத விதமாகப் பறிகொடுத்த தாயின் கண்ணீருக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

நிலைதடுமாறி கீழே விழுந்தவர்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகேயுள்ள தண்டலம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது 18 வயது மகள் சுபஸ்ரீ சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று சுபஸ்ரீ தனது வீட்டு வாசலில் உறவினரின் கைக்குழந்தையைத் தூக்கி வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இக்கட்டான அந்த நொடியிலும், தன் கையில் இருந்த குழந்தைக்குக் காயம் ஏற்படாதவாறு குழந்தையை பத்திரமாகப் பிடித்துக்கொண்டதில் தரையில் பலமாக விழுந்த சுபஸ்ரீயின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள பார்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிர்ச்சி தகவல்
அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின், மறுநாளில் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அத்துடன் அவரது நுரையீரலில் பாதிப்பு இருந்ததாகக் கூறி அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த சுபஸ்ரீ, திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
கை எலும்பு முறிவுக்காக அனுமதிக்கப்பட்ட மகள், திடீரென உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையே மரணத்திற்கு காரணம் எனக்கூறி, மருத்துவமனை அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, உடலை வாங்க மறுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

வாக்குவாதம், பரபரப்பு
இதற்கிடையில், மருத்துவமனை நிர்வாகம் சுபஸ்ரீ உடலை கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்கள், தங்களுக்கு தெரியாமல் எப்படி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பலாம் எனக்கூறி மருத்துவமனை நிர்வாகத்தோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

போலீசார் எடுத்துக்கூறியும் உடலை வாங்க மறுத்தவர்கள் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சட்டப்படி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் மறியல் கைவிட்டனர்.

மருத்துவமனை விளக்கம்
உயிரிழந்த சுபஸ்ரீ உறவினர்களின் குற்றச்சாட்டை மறுத்த மருத்துவமனை நிர்வாகம், சுபஸ்ரீக்கு மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும்,

பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved