Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 06:18 AM
தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னை வந்து உள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சை சந்தித்து, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்தவர், திமுக கூட்டணி மீது அதிருப்தியில் உள்ளதால் மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டதாகவும், தமிழ்நாட்டு அரசியலில் இன்று ஒரு புதிய துவக்கம் என்றும் உற்சாகத்துடன் கூறினார்.
தமிழகம் வருகை
சென்னை விமான நிலையத்தில், பியூஷ் கோயல் கூறியதாவது;
திமுக அரசு மீது, பொது மக்கள் விரக்தி மற்றும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில், வளர்ச்சிக்கான அரசு வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா போன்ற மாநிலங்கள், காங்கிரஸ் கட்சியை வெறுத்தது போல, தமிழக மக்களும் காங்கிரஸ் கட்சியையும் அதன் கூட்டணி கட்சிகளையும் வெறுக்கின்றனர்.
இபிஎஸ் தமிழக முதல்வர்
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி, தொகுதி பங்கீட்டு விபரங்களை அறிவிப்போம். நாங்கள் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். அனைவரும் திருப்தி மற்றும் மகிழ்ச்சி அடையும் வகையில் எங்களின் தொகுதி பங்கீடு அமையும்
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
களை கட்டும் தேர்தல் களம்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை பாதி முடித்து உள்ளது. இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை முடிவுக்கு வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் இன்று பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயில் தமிழகம் வந்துள்ளார்.
இன்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved