Also Watch
Read this
மத்திய கிழக்குப்போரில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் உயிரிழந்து உள்ளதாகவும், ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியானது.

அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரான்
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா, ரியாத், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த போரில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாயமான ஒருவரை தேடும் பணி நடைபெற்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஈரான் திட்டவட்டம்
மின் உற்பத்தி நிலையங்களை தாக்கினால், ஹார்முஸ் நீரிணை நிரந்தரமாக மூடப்படும் என்று, அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும், அமெரிக்காவின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்பை மீளமுடியாத வகையில் அழிப்பதாகவும் மிரட்டல் விடுத்து உள்ளது. ஹார்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் முழுமையாக திறக்க வேண்டும் எனவும், இல்லையெனில், ஈரானின் மின்நிலையங்களை அமெரிக்கா தாக்கி அழிக்கும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு எதிரிகளை தவிர மற்றவர்களுக்கு ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணை தாக்குதலால் பெரும் பரபரப்பு நிலவியது. ஏவுகணைகள் விழுந்து வெடித்த இடங்களில் இஸ்ரேலிய மீட்பு படையினர், பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய இஸ்ரேல் பகுதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், கிளஸ்டர் ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்,15 பேர் காயமடைந்து உள்ளதாகவும், பல கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேஸ் பிரதமர் அழைப்பு
ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்து உள்ளார். இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம், முக்கிய நகரங்களான அராத் மற்றும் டிமோனா ஆகிய இடங்களில் ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த சூழலில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட அராத் மற்றும் டிமோனா நகரை பார்வையிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் ஒட்டுமொத்த உலகிற்கும் அச்சுறுத்தலானது என்பதற்கு ஆதாரம் கடந்த 48 மணி நேர தாக்குதலே சாட்சி என தெரிவித்து உள்ளார்.

மனித குலத்திற்கே பெரும் அவமானம்
மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்கள், மனித குலத்திற்கே பெரும் அவமானம் என போப் லியோ வேதனை தெரிவித்து உள்ளார். போர்கள் அமைதியை சீர்குலைப்பதுடன், அப்பாவி மக்களின் உயிர்களை பறிப்பது நாகரீக சமூகத்திற்கு பொருந்தாது என்றும், வன்முறையை தூண்டும் ஆயுத விற்பனையையும், நாடுகளுக்கு இடையிலான பகையையும் கைவிட வேண்டும் என்றும், போப் லியோ கேட்டு கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved