Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 05:55 AM
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளதாக மதுரை மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்து உள்ளார்.
சாத்தான்குளம் பயங்கரம்
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கு எதிரான தீர்ப்பு இன்று மார்ச் 23ஆம் தேதி, மாலை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் வழங்கப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி, சாத்தான்குளம் பகுதியில், மொபைல் கடை நடத்தி வந்த 58 வயதான ஜெயராஜ் மற்றும் அவரது 31 வயதான மகன் பென்னிக்ஸ் ஆகியோர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் விடிய விடிய கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. லத்தியால் கடுமையாகத் தாக்கியதுடன், அவர்களின் மர்ம உறுப்புகளில் கொடூரமான காயங்களை ஏற்படுத்தி, மிக மோசமான முறையில், போலீசார் சித்திரவதை செய்துள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
அடுத்தடுத்து உயிரிழப்பு
இருவரும் ஜூன் 20ஆம் தேதி, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், காவல் நிலையத்தில் அனுபவித்த கொடுமைகள் காரணமாக, ஜூன் 22ஆம் தேதி மாலை பென்னிக்ஸிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே அவர் உயிரிழந்தார். மகனின் மரணத்தைத் தாங்க முடியாத தந்தை ஜெயராஜ், ஜூன் 23ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்தடுத்த இந்த இரட்டை மரணங்கள் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. நீதி கேட்டு மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடினர்.
துணிச்சலான காவலர்
மதுரை உயர் நீதிமன்ற அமர்வு, தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த சம்பவத்தின் போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ரேவதி, அங்கு நடந்த கொடூரமான தாக்குதல் குறித்து நீதிபதியிடம் துணிச்சலாக சாட்சியம் அளித்தார். இது வழக்கில் மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
சிபிஐ விசாரணை
மக்களின் போராட்டங்கள், மனித உரிமை ஆர்வலர்களின் அழுத்தம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக, இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ தனது விசாரணையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன் மற்றும் காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து உட்பட 10 காவலர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்தது.
9 காவலர்கள்
இவர்களில் எஸ்.எஸ்.ஐ. பால்துரை என்பவர் விசாரணைக் காலத்திலேயே கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததால், தற்போது எஞ்சிய 9 காவலர்கள் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தந்தை மற்றும் மகன் இருவரும் காவல்துறையினரால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதே அவர்களின் மரணத்திற்கு முக்கிய காரணம் என்று உறுதிப்படுத்தப் பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இன்று மாலை தீர்ப்பு
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன்னிலையில் கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. சிபிஐ தரப்பில் 50க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, லத்திகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்கள் மற்றும் தடயங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 6 ஆண்டுகள் நீண்ட இந்தச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இன்று மாலை வெளியாகவுள்ள தீர்ப்பு, ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved