Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க அதிபர் டிரம்ப் உற்சாக பேச்சு :
தாம் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் எனவும், இந்தியா பெற விரும்பும் அனைத்தும் கிடைக்கும் எனவும் அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பேசிய அவர், இந்தியா தன்னை 100 சதவீதம் நம்பலாம் எனவும், எப்போதாவது உதவி தேவைப்பட்டால் தங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், தங்களிடம் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தைகள் உள்ளதாகவும், தாம் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் எனவும், அவருக்கு தனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இறுதிக்கட்டத்தில் ஈரானுடன் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை :

அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானால் வீசப்பட்டுள்ள கடல் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு பிரிட்டன் கடற்படை தயாராகி வருகிறது.
அமெரிக்க கடற்படை முற்றுகையை தடுக்க ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடல் கண்ணி வெடிகளை புதைத்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து நடைபெறும் வகையில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் கொண்ட சர்வதேச கூட்டுப்படை கண்ணி வெடியை அகற்றும் பணியில் ஈடுபட உள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் சீரான கப்பல் போக்குவரத்து எப்போது?

அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, அடுத்த 30 நாட்களில் ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சுமுகமாக நடைபெறும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் செய்தி நிறுவனமான டாஸ்னிம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, 30 நாட்களில் ஹோர்முஸ் ஜலசந்தியில் போருக்கு முந்தைய சூழ்நிலை திரும்பும் என தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் அனைத்து தடைகளும் விலக்கிக் கொள்ளப்படும் எனவும், இந்த காலத்தில் வெளிநாடுகளில் உள்ள முடக்கப்பட்ட ஈரானின் சொத்துகள் அனைத்தும் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் :

தலைநகர் கீவ்வில் வான்வழி தாக்குதல்களை நடத்திய ரஷ்யா, சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஆரேஷ்நிக் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களில் 2 பேர் பலியானதாகவும், 83 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் அரசு அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்கள், பள்ளிகள் பலத்த சேதமடைந்தன. கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில், இத்தகைய சக்திவாய்ந்த ஆயுதத்தை ரஷ்யா 3-வது முறையாக பயன்படுத்தி உள்ளது.
போர் நிறுத்தத்திற்கான இறுதி ஒப்புதல் நிலுவையில் உள்ளது :
ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை தாங்களே வைத்திருக்கப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பேச்சுவார்த்தை மூலம் மோதலை முழுவதும் முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பேசிய ட்ரம்ப், அமெரிக்கா, ஈரான் இடையேயான ஒப்பந்தம் பெரும்பாலும் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்டுள்ளது என்றும், இறுதி ஒப்புதல் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஈரான், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை தங்கள் நாடே தொடர்ந்து வைத்திருக்கும் என கூறியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved