news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பொய் வழக்கிட்டால் நடவடிக்கை என அன்பில் மகேஷ் உறுதி
tv

Also Watch

பொய் வழக்கிட்டால் நடவடிக்கை என அன்பில் மகேஷ் உறுதி

மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நிறைவு

46

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் 18ஆம் தேதி நடைபெறும் காவல்துறை விசாரணை மிரட்டும் வகையில் இருக்க கூடாது என்று அன்பில் மகேஷ் வலியுறுத்தி உள்ளார். ’பொய் வழக்கு போட்டால் அதனை சட்டப்படி சந்திக்க தயார்,’ என்றும் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

சோதனையில் என்ன நடந்தது?
இதுகுறித்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், கூறியதாவது;
காலை 7.40 மணிக்கு வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் 20க்கும் மேற்பட்ட சென்னை போலீசார், பிற்பகல் 3.40 மணி வரை, கிட்டத்தட்ட 8 மணி நேரத்துக்கும் மேலாக, வீட்டில் ஏதாவது கிடைக்குமா? என்ற அடிப்படையில் முழுமையாக சோதனை நடத்தினர். அவர்கள் வந்தவுடன் வீட்டிலிருந்த அனைத்து அறைகளையும் திறந்து விட்டேன். வீடு முழுவதையும் அவர்கள் சோதனை செய்தனர்.

அமைச்சராக இருந்த போது...
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தொடர்பாக வைத்திருந்த ஆவணங்கள் இங்கு இருந்தன. அந்தந்த மாவட்டங்களில் துறை சார்ந்து என்னென்ன ஆய்வு மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பான கோப்புகளை மாவட்ட வாரியாகத் தனித்தனியாக வைத்திருந்தேன். பள்ளிக்கல்வித் துறையில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டங்கள் தொடர்பான கோப்புகளும் இருந்தன. கல்வித் துறை தொடர்பாக வைத்திருந்த அந்தக் கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

வரும் 18ஆம் தேதி விசாரணை
வரும் 18ஆம் தேதி நேரில் வந்து, அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். நிச்சயமாக ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கூறினேன். “ஒரு சோதனைக்கு இதுபோன்று யாரும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்ததில்லை. நீங்கள்தான் முதன்முறையாக இப்படி ஒத்துழைப்பு அளித்திருக்கிறீர்கள்,” என்று அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை.


ஏன் இந்த நடவடிக்கை?
சட்டமன்றத்தில் எதிர்த்து பேசினால், அடுத்த நிமிடமே வீட்டுக்கு வந்து சோதனை நடத்துகிறீர்கள். சட்டமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் நான் என்ன பேசினேன்? மக்கள் மன்றத்தில், ”அவர் ஹிட்லரைப் போல இருக்கிறார் என்றால், அவருடன் இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் கோயபல்ஸைப் போல ஆளுக்கொரு பொய்யைக் கூறுவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்,” என்று பேசினேன்.

புதிய தலைமைச்செயலகம்
“கஜானா காலி; கஜானா காலி” என்றும் சொல்கிறீர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிய புதிய தலைமைச் செயலகம் தற்போது மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. அந்தக் கட்டிடம் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல், ஆங்காங்கே சில பகுதிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சில கோடி ரூபாய் செலவு செய்து அந்த கட்டிடத்தையே மீண்டும் தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தலாம்.
அப்படியிருக்கும்போது, கஜானா காலியாக இருப்பதாகக் கூறிக்கொண்டே புதிய தலைமைச் செயலகத்தை ஏன் கட்ட வேண்டும்? என்று கேள்வி எழுப்பினேன்.

இடைத்தேர்தல் தேவையா?
தற்போது திணிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரத்தில், எனக்கு சில வாக்குச்சாவடிகளை ஒதுக்கப்பட்டுள்ளது. தாராபுரத்துக்கு சென்றபோது, “இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்று, ஆளுங்கட்சியின் முகத்தில் கரியைப் பூசும் வகையில், இந்த வெற்றி அமைய வேண்டும்,” என்று பேசிவிட்டு வந்தேன். நாங்கள் இப்படி பேசும்போதெல்லாம், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஏதாவது ஒரு சந்தேகத்தைக் கூறி சோதனை நடத்துகின்றனர். மக்களின் கவனத்தை மடைமாற்றம் செய்யும் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.

நேரில் வருகிறேன்...
18ஆம் தேதி காலை 11 மணிக்கு, நீங்கள் குறிப்பிட்ட அதே நேரத்தில் நான் ஆஜராவேன். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் பதிலளிப்பேன். விசாரணை முடிந்த அடுத்த நிமிடமே நான் திருச்சிக்குக்கூட வரமாட்டேன், அங்கிருந்து நேராக இடைத் தேர்தல் நடைபெறும் தாராபுரத்துக்கு தான் செல்வேன். எனக்கும் எங்கள் மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடுவேன். தாராபுரம் இடைத்தேர்தலில் நிச்சயமாக நாங்கள் வெற்றியை நிலைநாட்டுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

77 ஆண்டுகளைக் கடந்து...
இந்த மாதிரியான சலசலப்புகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். திமுக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. இது 77 ஆண்டுகள் பழமையான இயக்கம், இந்த நாட்டு மக்களுக்காகப் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்திய இயக்கம். எங்கள் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பணியாற்றுவோம். எந்த இடத்திலும் தொய்வின்றி, பணியாற்ற திமுகவினர் காத்திருக்கின்றனர்.

டார்க்கெட் அவர் தான்...
இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான். மக்கள் நம்பிக்கை உடன் எதிர்பார்த்திருப்பது 2 அமைப்புகளைத் தான். ஒன்று காவல்துறை, மற்றொன்று நீதிமன்றம். நீங்கள் எத்தனை பொய் வழக்குகளைப் பதிவு செய்தாலும், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். அங்கு எங்களுடைய உண்மை நிலையை நிலைநாட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
காவல்துறை நண்பர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான். விசாரணையை முறையாக நடத்துங்கள். நல்லது நடந்திருக்கிறதா, தவறு நடந்திருக்கிறதா? என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது. ஆனால், “டார்கெட் நீங்க இல்லைங்க, டார்கெட் ‘அவர்’தான், அவர் பேரை சொல்லுங்களேன், விட்டுவிடுகிறோம்,” என்கிற மாதிரி தயவு செய்து செய்யாதீர். அன்பாக மிரட்டாமல், விசாரணை உத்திகளைப் பயன்படுத்தாமல் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.

என்ன செய்தீர்கள்?
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்றத்தில் துணிச்சலாகப் பேசுகிறார், கேள்விகளையும் எதிர்கேள்விகளையும் முன்வைக்கிறார். அடுத்த நிமிடமே அவரது வீட்டில் சோதனை நடக்கிறது. இந்த சோதனைக்கும் அவர் முழுமையாக ஒத்துழைப்பு அளித்தார். மக்கள் மன்றத்தில் எங்கள் தலைவரின் மிசா கைது குறித்து கொச்சைப்படுத்திப் பேசப்பட்டபோது, தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அங்கு நாங்கள் எங்களுடைய கருத்துகளை முன்வைத்தபோது, உடனடியாக வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்தும் வேலையைத்தான் செய்தீர்கள். இப்படி தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்துகிறீர்களே தவிர, நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள்? என்பதைத்தான் நான் கேட்கிறேன்.

நீதியை நிலை நாட்டுவோம்...
லஞ்சம் கொடுத்ததாக கூறிய நிதி அமைச்சர் மரிய வில்சன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினேன். பொதுக் கூட்டத்திலோ மக்கள் மன்றத்திலோ பேசுவதைவிட, சட்டமன்றத்தில் அவர் பேசி உள்ளார். அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். இந்த விவகாரத்தில் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடுவோம், நீதியை நிலைநாட்டுவோம்.
இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Related Link
தவெக அரசின் அரசியல் பழிவாங்கல் என முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தவெக அரசின் அரசியல் பழிவாங்கல் என முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரேபிடோ நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved