Also Watch
Read this
ஐந்து மாநில தேர்தல் பணிகளை சீர்குலைக்கவே அவசர அவசரமாக மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று, தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில், திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.

மக்களவையில் கனிமொழி...
மக்களவையில் உரையாற்றிய திமுக. எம்பி கனிமொழி பேசியதாவது;
8 கோடி மக்களின் குரலாக மக்களவையில் உரையாற்றி கொண்டிருக்கிறேன். ஐந்து மாநில தேர்தல் பணிகளை சீர்குலைக்கவே அவசர அவசரமாக மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி
தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி ஆகும். மத்திய அரசின் குரலை ஏற்று தென்மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளன.

அரசிதழில் வெளியிட்டது ஏன்?
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் போதே அரசிதழில் வெளியிட வேண்டியது ஏன்? அரசிதழில் வெளியானதற்கு பிறகு எதற்காக இந்த விவாதத்தை நடத்தி கொண்டிருக்கிறீர்கள்? மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதா ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.

சொல்வது ஒன்று, இருப்பது வேறொன்று
மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது ஒன்றாகவும், ஆனால் மசோதாவில் இருப்பது வேறொன்றாகவும் உள்ளது. 50 சதவீதம் உயர்வு என்ற அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மசோதாவில் கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்று இருக்கிறது. அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த தமிழ்நாடு தொகுதி மறுவரையறையால் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? மத்திய உள்துறை அமைச்சரின் பரிந்துரையை தொகுதி மறுவரையறை குழு ஏற்காவிட்டால் என்ன நடக்கும்?

தமிழ்நாடு பாதிக்கப்படும்
2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாடு பாதிக்கப்படும், 11 இடங்கள் குறையும், தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெறுவதால் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை 2 வாரத்திற்கு ஒத்திவைக்க கோரினோம்.
இவ்வாறு கனிமொழி எம்பி உரையாற்றினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved