நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்த தயாரிப்பு நிறுவனத்தின் தலையில் மண் அள்ளி போடும் வகையில் சென்சார் போர்டு வைத்த செக் என்ன? நீதிமன்றத்தில் நிகழ்ந்த காரசார வாதம் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.500 கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்த தயாரிப்பு நிறுவனம் தலை சுற்றி போகும் அளவுக்கு விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை வைத்து சென்சார் குழு ஐயா பட வடிவேல் காமெடி மாதிரி தான் விளையாடிக் கொண்டு இருக்கிறது.விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன், பொங்கல் பண்டிகையை ஒட்டி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படத்தின் FIRST LOOK போஸ்டர் ரிலீஸ் ஆகும் போதே அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு 2 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், 2ஆவது நாள் விசாரணையில் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலும், சென்சார் போர்டு தரப்பிலும் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு காரசாரமான வாதங்கள் முன் வைக்கப்பட்டன.அப்போது, ஜனநாயகன் படத்தில் எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட்டது என்ற விபரங்களை நீதிபதி கேட்டறிந்தார். தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த புகாரில் ஆட்சேபங்கள் பரிசீலிக்கவில்லை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்ற நீதிபதி, இந்த புகாரெல்லாம் தாக்குப் பிடிக்காது என்றார். அதோடு, ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க முடிவு செய்த பின்னர், மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? எனவும் நீதிபதி தணிக்கை வாரியத்திற்கு கேள்வி எழுப்பினார்.அதற்கு, ஒரு திரைப்படத்தை தணிக்கை குழு பார்வையிட்ட பிறகும் மறு ஆய்வுக்கு உத்தரவிட தணிக்கை வாரிய தலைவருக்கு அதிகாரம் உள்ளது என வாதிட்ட தணிக்கை குழு, படத்தில் பாதுகாப்பு படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், அதற்கு பாதுகாப்பு படைகளை சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறியது. இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, இங்கு அனைத்தும் ABNORMAL ஆக இருக்கிறது என சந்தேகம் தெரிவித்தார். தொடர்ந்து வாதங்களை முன் வைத்த சென்சார் போர்டு, முதலில் படம் பார்த்த உறுப்பினர்கள் யாரும் மறு ஆய்வுக் குழுவில் இருக்க மாட்டார்கள் எனவும், மறு ஆய்வு குழுவில் வேறு 5 பேர் தான் இருப்பார்கள் எனவும் தெரிவித்தது. மேலும், ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகார் எப்படி தணிக்கை வாரிய தலைவருக்கு அனுப்பப்பட்டது? என நீதிபதி கேள்வி எழுப்ப, சம்பந்தப்பட்ட நபரே நேரடியாக வந்து புகாரை வழங்கியதாக தணிக்கை வாரியம் தெரிவித்தது. புகார் பெறப்பட்ட அன்றே சான்றிதழ் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற தகவல் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டதா? என்ற நீதிபதி கேள்விக்கு, சான்றிதழ் வழங்கும் முன்போ அல்லது அதிகாரப்பூர்வமாகமறுக்கும் முன்போ மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது என்ற தணிக்கை வாரியம், நாங்கள் நடவடிக்கை எடுக்கும் முன்பே தயாரிப்பு நிறுவனம் முன் முடிவுக்கு வந்து நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது என வாதிட்டது. மேலும், ஜனநாயகன் படக்குழு டிசம்பர் 18ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது என்பதற்காக உடனடியாக சான்றிதழ் வழங்க முடியாது என்ற தணிக்கை வாரியம், ஜனநாயகன் படம் மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக 5ஆம் தேதி தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும் கூறியது.தொடர்ந்து, சான்றிதழ் வழங்குவதற்கு வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைகள் என்னென்ன என தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாசித்தார். தணிக்கை வாரியத்தில் இரண்டு நடை முறைகள் இருக்கிறது என்ற வழக்கறிஞர், சில காட்சிகளை நீக்கினால் U/A சான்றிதழ் வழங்கப்படும் என டிசம்பர் 22ஆம் தேதி கூறியதாலேயே, தணிக்கை வாரியம் தங்களது சட்ட நடைமுறைகளை பின் பற்றக்கூடாது என்று அர்த்தமில்லை. மறு ஆய்வுக்கு உட்படுத்த கூடாது என்று அர்த்தமில்லை எனவும் வாதிடப்பட்டது. மேலும், சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் தங்களது அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது எனவும், விதிகளின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே சென்சார் போர்டுக்கு உத்தரவிட முடியும் எனவும் கூறிய தணிக்கை வாரியம், இந்த விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றது. இதனையடுத்து, ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. ஜனநாயகன் படத்தை முதலில் பார்த்த படக்குழுவினர் ஒரு மனதாக சான்றிதழ் வழங்க முடிவு செய்தனர் எனவும், மறு ஆய்வுக்கு அனுப்ப இருப்பதாக ரிலீஸூக்கு 4 நாட்கள் முன்பு அதாவது 5ஆம் தேதி இரவு 7.59 மணிக்கு தான் தெரிவித்தார்கள் எனவும் வாதிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பல முறை தணிக்கை வாரியத்தை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை எனவும் KVN நிறுவனம் தெரிவித்தது. மேலும், விஜய்யின் ஜனநாயகன் படத்தில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக கூறிய தயாரிப்பு நிறுவனம், வழக்கமாக ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், தங்களுக்கு மட்டும் திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுவதாக கூறியது. ஜனநாயகன் படம் பார்த்த தணிக்கை குழுவில் 5 பேர் இருந்த நிலையில், சென்சார் உறுப்பினரே படத்திற்கு எதிராக புகார் அளித்திருக்கிறார் என்ற அதிர வைக்கும் தகவலை தெரிவித்த தயாரிப்பு நிறுவனம், புகார் அளித்ததே சென்சார் குழுவின் உறுப்பினர் தான் என்பது தங்களுக்கு தற்போது தான் தெரிந்திருக்கிறது எனவும், புகார் அளித்தவர் குறித்து இதுவரை தகவல் தெரிவிக்காமல் இருந்தது ஏன்? எனவும் வாரியத்திற்கு கேள்விகளை முன் வைத்தது KVN தயாரிப்பு நிறுவனம்.மேலும், தணிக்கை வாரியம் ஒரு முறை முடிவு செய்த பின்னர், மறு பரிசீலனை செய்ய முடியாது என்ற தயாரிப்பு நிறுவனம், பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அவ்வாறு மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியும் எனவும் பெரும்பான்மை உறுப்பினர்கள் சான்று வழங்க பரிந்துரைக்கும் போது, ஒரு உறுப்பினரின் புகாரை எப்படி குழுவின் முடிவாக மாறும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பப்பட்டது. மத்திய அரசால் படத்தை திருத்த முடியாது என்ற தயாரிப்பு நிறுவனம், அதற்கான அதிகாரத்தை நீதிமன்றம் ரத்து செய்து விட்டது எனவும் கூறிய நிலையில், அதற்கு தணிக்கை வாரியம் குறுக்கிட்டு பதிலளித்தது. மத்திய அரசால் இப்படி செய்ய முடியாது என்ற சென்சார் தரப்பு, ஒரு படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் அதிகாரம் முழுக்க முழுக்க தணிக்கை குழு தலைவருக்கு தான் உள்ளது எனவும், தணிக்கை வாரியத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது எனவும் வாதிட்டது.இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, வழக்கில் வெள்ளிக்கிழமையன்று காலைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறார். வெள்ளிக்கிழமை தான் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், வழக்கு காரணமாக படம் ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவில் ஜனநாயகன் படக்குழுவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், உடனடியாக சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்பதால், படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால், ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாகவும், திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரைக்கும் விஜய் படம் சொன்ன தேதியில் சரியாக ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது என்ற நிலையில், கடைசி படமான ஜனநாயகன் சிக்கலில் சிக்கி, ரிலீஸ் தேதி தள்ளிப் போவது ரசிகர்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சென்சார் குழுவின் நடவடிக்கைக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் கொந்தளித்து, சென்சார் போர்டை சாடும் வகையில் விஜய்யின் கத்தி பட காட்சியை பகிர்ந்து வருகின்றனர். இதையும் பாருங்கள் - 312 சவரன் தங்கம் எங்கே?