காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு, புதிய உற்சவர் சிலை செய்ததில் அரங்கேறிய மோசடி தொடர்பான வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. உற்சவர் சிலையில் துளிகூட தங்கம் இல்லை என, ஐஐடி அறிக்கையில் கூறியுள்ளதால், பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 312 சவரன் தங்கம் எங்கே? என கேள்வி எழுந்துள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்த தொன்மையான உற்சவர் சிலை சேதமடைந்ததால், 2015ஆம் ஆண்டு புதிதாக சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலைகள் செய்யப்பட்டன. இதற்காக, பக்தர்களிடம் இருந்து 312 சவரன் தங்கம் நன்கொடையாக பெறப்பட்டன. ஆனால், உற்சவர் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு சிவகாஞ்சி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகு, முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்புப் பிரிவு போலீஸார், ஐஐடி குழுவினரை அழைத்து வந்து சோதனை செய்ததில், உற்சவர் சிலையில் துளிகூட தங்கம் இல்லை என்பது தெரியவந்தது.இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா ஆகியோரை கைது செய்தனர். ஆனால், அதன் பிறகு இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல் போல, அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லாமலேயே இருந்தது. எனவே, வழக்கை மீண்டும் சிவகாஞ்சி போலீஸ் விசாரணைக்கே மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.2023ல் சிவகாஞ்சி போலீஸார் மீண்டும் விசாரணையை தொடங்கி, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், ஏற்கெனவே வழக்கில் சேர்த்திருந்த கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி ஆகியோரை விடுவித்து, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா ஆகியோரை சேர்ந்திருந்தனர்.மேலும், 2017ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் வழக்கின் தன்மை மற்றும் பிரிவுகளில் திருத்தம் செய்துள்ளனர். அந்த வகையில், புதிய உற்சவர் சிலை செய்ய பக்தர்களிடம் இருந்து 312 சவரன் தங்கம் நன்கொடையாக பெறப்பட்டதாகவும், ஆனால், சிலையில் துளிகூட தங்கம் இல்லை என ஐஐடி தெரிவித்துள்ளதையும் பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கு கடந்த டிசம்பர் 30ஆம் தேதி காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் முதல்முறையாக விசாரணைக்கு வந்தபோது, வீர சண்முகமணி, கவிதா உள்ளிட்ட 9 பேர் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், வழக்கு மீண்டும் ஜனவரி 5 ஆம் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களின் கருத்துகளை கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.இந்த நிலையில்தான், ஏகாம்பரநாதர் கோயில் புதிய உற்சவர் சிலை செய்ததில் துளிகூட தங்கம் இல்லை என்கிற விவகாரம், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே, பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 312 சவரன் தங்கம் என்ன ஆனது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்த தங்கத்தின் தற்போதைய மதிப்பு 3 கோடி ரூபாயை தாண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் பாருங்கள் - தீங்கிழைத்தவன் தீக்கிரையானான்