கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் அருகே கடன் சுமையில் சிக்கி தவிக்கும் தனக்கு நிலத்தை விற்று பணம் தர மறுத்த தம்பியை, உடன்பிறந்த அண்ணனே தீவைத்து எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அதே நெருப்பு ரிவர்ஸ் எடுத்து அண்ணனையும் சாம்பலாக்கியது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழியை பெரியோர் சொல்ல கேட்டிருப்போம். நிஜத்தில், காலம் தாழ்ந்து பார்த்திருப்போம். ஆனால், இங்கு மறுநொடியே வினை சுட்டெரித்துள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டம், கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது அண்ணன் முனிராஜூ, கடந்த 8 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த முறை பண்டு கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் நெருக்கடியில் தவித்த அவர், உறவினர்களிடம் பணம் கேட்டுப்பார்த்துள்ளார். யாரும் உதவ முன்வராத நிலையில், பண்டு செலுத்தியவர்கள் அனைவரும் முனிராஜூவை தினம் தினம் அசிங்கப்படுத்தி ஆபாசமாக திட்டி வந்ததாக கூறப்படுகிறது.கடும் மன உளைச்சலுக்கு ஆளான முனிராஜூ, தனது குடும்பத்தினர் உதவியுடன் பாரம்பரிய சொத்தில் சிறு நிலத்தை விற்று கடன் அடைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும், முழுமையாக பணத்தை கொடுக்க முடியாமல் தவித்த முனிராஜூ, தனக்கும் தனது தம்பிக்கும் சொந்தமான இடத்தை விற்க முடிவு செய்துள்ளார். இதற்கு, தம்பி ராமகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. தம்பியின் கையெழுத்தில்லாமல் நிலத்தை விற்க முடியாத ஆத்திரத்தில் அவரை தீர்த்துக் கட்ட துணிந்திருக்கிறார் முனிராஜூ.இரவில் அனைவரும் தூங்கிய பின், தம்பி ராமகிருஷ்ணனின் வீட்டில் எகிறி குதித்து உள்ளே சென்ற முனிராஜூ, வெளியே வீட்டை பூட்டிவிட்டு படுக்கையறை ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றியுள்ளார். பின்னர் ஒரு தீப்பந்தத்தை கொளுத்தி ஜன்னல் கம்பி வழியே தீ பற்ற வைத்த நிலையில், எதிர்பாராத விதமாக அவர் மீதும் தீப்பிடித்துள்ளது.ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்ட நிலையில், முனிராஜூவும் தீப்பற்றி கதறித் துடித்து உடல்கருகி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருமால்ஷெட்டிஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையும் பாருங்கள் - பிறந்தநாள் கேக்கை மேடையில் தூக்கி வீசி விட்டு சென்ற தொண்டர்