Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 10:41 AM
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. ஆட்சிக்கு வந்தால் திருச்சி, கோவை, சென்னை, குமரி, மதுரை ஆகிய 5 தலைநகரங்களை உருவாக்கப் போவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குறுதி அளித்து உள்ளார்.
* நாதக தேர்தல் அறிக்கை வெளியீடு
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பதாவது;
அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும். சென்னை மட்டுமே தலைநகராக இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிகிறது. அனைத்தையும் தேடி சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி, மக்கள் வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாகும். இதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும்.
* சென்னை, திருச்சி, மதுரை, கோவை, குமரி
தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி, முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை - தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை -தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை - மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி - தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும்.
* மகளிருக்கு தனித்தொகுதி
உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனி தொகுதி போராடி பெறப்படும். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7ஆவது பட்டியலில் உள்ள சட்டம் இயற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் பெற்று உள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்று உள்ளது. ஆக ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பையும் உறுதி செய்கிறது.
* கூட்டாட்சி, தன்னாட்சி
எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர பாடுபடுவோம்.
* தமிழர்களுக்கு முன்னுரிமை
கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடு முறையை அம்பேத்கர் வழியில், நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில், தமிழ் குடிகளுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழி வழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ? அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும்.
* தமிழ் தேசிய மரம் பனை
அங்குலம் ஆற்றுமணல் உருவாக நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நாளைக்கே முப்பதடி ஆழத்துக்கு மேலாக ஆற்று மணலை சுரண்டி மணல் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மணல் கொள்ளையால் ஆற்றுப் படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. எனவே, நாம் தமிழர் அரசு, மணல் கொள்ளையை தனிப்படை அமைத்து முழுமையாக தடுக்கும். தமிழ் தேசிய மரமாக, பனை அறிவிக்கப்படும். இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பது, புதிய பனை மரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் உருவாக்கப்படும். ஊர்தோறும் இருக்கும் நீர் நிலைகளைச் சுற்றி பனை மரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.
* ஆடு, மாடு... அரசுப் பணி...
குண்டூசி முதல் ஏவுகணை வரை அனைத்தையும் உருவாக்குபவர்களே விலையை முடிவு செய்ய இயலுகிறது. ஆனால், வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கிற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும். ஆடு, மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவர். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved