news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வந்தது காங்கிரஸ் லிஸ்ட், செல்வப்பெருந்தகை ஸ்கெட்ச்
tv

Also Watch

tv

Read this

வந்தது காங்கிரஸ் லிஸ்ட், செல்வப்பெருந்தகை ஸ்கெட்ச்

5 எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சி

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஒரு வழியாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் செல்வப்பெருந்தகை களமிறங்கும் நிலையில், அண்மையில் காங்கிரஸில் கை கோர்த்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனுக்கு பென்னாகரம் தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது? யாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

வந்தது காங்கிரஸ் பட்டியல்
எப்போது வரும், எப்போது வரும்? என எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் ஒரு வழியாக வெளியாகி உள்ளது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், வழக்கம் போல, கடைசி கட்சியாக காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் முதன் முதலில் தொகுதி பங்கீட்டை முடித்தது காங்கிரஸ் தான். ஆனால், வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் கட்சிக்குள் குளறுபடி, கும்மியடித்து பல கட்ட குழப்பங்கள் அரங்கேறிய நிலையில், கடைசியாக டெல்லி தலைமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

வேட்பாளர்களின் பின்னணி
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்வப்பெருந்தகை தொகுதி மாற இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலேயே அவர் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. பொன்னேரி தொகுதியில் துரை சந்திரசேகரும், வேளச்சேரி தொகுதியில் அசன் மௌலானாவும், கிருஷ்ணகிரி தொகுதியில் முன்னாள் எம்.பி. செல்லக்குமாரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த இடைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன தாரகை கத்பட், குளச்சல் தொகுதிக்கு மாறியிருக்கும் நிலையில், குளச்சல் சிட்டிங் எம்.எல்.ஏ.வான பிரின்ஸுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், விளவங்கோடு தொகுதியில் புதிதாக பிரவீன் என்பவரை களமிறக்கி உள்ளது காங்கிரஸ்.

சிட்டிங் எம்எல்ஏக்கள்
நாங்குநேரி தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், கிள்ளியூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிட, அம்பாசமுத்திரம் தொகுதியில் வி.பி.துரை, திருவடானை தொகுதியில் ராம கருமாணிக்கம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ், சங்கரன்கோவில் தொகுதியில் சங்கை கணேசன் ஆகியோரும், சிவகாசி தொகுதியில் கணேசன் அசோகனும் போட்டியிடுகிறார்கள். உசிலம்பட்டி தொகுதியில் சரவணக் குமாரும், காரைக்குடி தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. மாங்குடியும் போட்டியிடுகிறார்கள்.

திருநாவுக்கரசர் மகனுக்கு வாய்ப்பு
அறந்தாங்கி தொகுதியில், முன்னாள் எம்.பி.,யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 1977ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஆறு முறை அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார் திருநாவுக்கரசர். வயது முதிர்வு காரணமாக ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து ஒதுங்கி இருக்கும் திருநாவுக்கரசர், தனது மகனுக்கு எம்.எல்.ஏ. சீட்டு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

ஜாதி பெயர் சர்ச்சை
மயிலாடுதுறை தொகுதியில் ஜமால் யூனிஸ் முகமது என்பவரும், கடலூர் தொகுதியில் ஏ.எஸ்.சந்திரசேகரன் என்பவரும் களம் காணும் நிலையில், துறையூர் தொகுதியில் விச்சு லெனின் பிரசாத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதி நாயுடு போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பதும் சர்ச்சையாகிய உள்ளது. வேட்பாளர் பெயருடன் சாதி பெயரை சேர்த்து பட்டியல் வெளியாகி இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. கவுண்டம்பாளையம் தொகுதியில் சூரிய பிரகாசும், ஊட்டியில் ராமச்சந்திரனும், ஈரோடு கிழக்கு தொகுதியில் கோபிநாத் பழனியப்பனும் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்க்குமரனுக்கு வாய்ப்பு
ஆத்தூர் தனி தொகுதியில் அர்த்தநாரி போட்டியிடும் நிலையில், பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க் குமரன் போட்டியிடுகிறார். கடந்த வாரம் தான் தமிழ்க்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்ற நிலையில், இந்த வாரம் எம்.எல்.ஏ. சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த தேர்தலில் பாமக சார்பில் பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி நின்று எம்.எல்.ஏ. ஆன நிலையில், பாமகவில் ஏற்பட்ட பிளவில் ராமதாஸ் அணியுடன் ஐக்கியமானார். இந்த நிலையில், மகனை காங்கிரஸுக்கு அனுப்பி எம்.எல்.ஏ. சீட்டு வாங்கியிருக்கிறார் ஜி.கே.மணி. ஊத்தங்கரை தொகுதியில் குப்புசாமியும், சோளிங்கர் தொகுதியில் ஏ.எம்.முனிரத்தினமும் போட்டியிடும் நிலையில், கடந்த முறை எம்.எல்.ஏ. வாக இருந்த 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஐந்து பேருக்கு வாய்ப்பு இல்லை
சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கணேஷுக்கும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. பழனி நாடார், குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜகுமார் ஆகிய 5 பேருக்கும் சீட்டு மறுக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற 27 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். லிஸ்டில் மேலூர் தொகுதி விடுபட்டுள்ள நிலையில், கடந்த மக்களவை தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு முந்தைய நாளில் மயிலாடுதுறைக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டது போல, மேலூர் தொகுதிக்கும் வேட்பாளர் பெயர் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

Related Link
பக்கத்து இலைக்கும் பாயாசம் கேட்ட அண்ணாமலை

பக்கத்து இலைக்கும் பாயாசம் கேட்ட அண்ணாமலை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசியல் கேள்விகளுக்கு ’நோ கமெண்ட்ஸ்’ கூறிய ரஜினிகாந்த்

7
32 mins agoshare
ரஜினிகாந்த் பேட்டிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved