Also Watch
Read this
நேபாளத்தில், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டு வரும் நிலையில், அவற்றின் அடையாளங்களை காண முடியாமல், அரசு திணறி வருகிறது. உடல் சிதைந்து போன நிலையில் மீட்கப்படும் சடலங்களை அடையாளம் காண்பதற்காக மரபணு மாதிரிகள், கருவிழி, கைரேகை அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு, உடல்களை அரசே அடக்கம் செய்ய தொடங்கி உள்ளது.

கொடுமையிலும் கொடுமை
இயற்கையின் கோரத் தாண்டவத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் உறவுகளை இழந்து தவிப்பவர்களின் நெஞ்சில் இடியாய் இறங்கியிருக்கிறது ஒரு செய்தி. உயிருக்கு உயிராய் இருந்தவர்களை பறிகொடுத்தது கொடுமை என்றால் அவர்களை அடையாளம் காணமுடியாமல் தவிப்பது கொடுமையிலும் கொடுமை.

நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் நிலைமை என்னவென்றே தெரியாமலிருக்கும் சூழலில், பல உடல்கள் அடையாளமே காண முடியாத அளவுக்கு கை தனியாகவும் கால் தனியாகவும் முகம் முற்றிலும் சிதைந்த நிலையிலும் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை எழுநூற்றுக்கும் மேற்பட்ட உடல்களை மீட்பு படை மீட்டிருக்கிறது.

என்ன செய்வது? தவிப்பு
இந்நிலையில், மருத்துவமனைகளில் போதிய இட வசதி இல்லாததால் மீட்கப்படும் உடல்கள் அனைத்தையும் ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் குவியல் குவியலாக வைத்து வருவதாகவும், அவற்றை சிதைவடையாமல் பாதுகாப்பதற்கான வசதி இல்லாததால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருவதாகவும் மீட்புபடை வீரர்கள் கூறுகின்றனர்.

நாளாக நாளாக மீட்கப்பட்ட உடல்களில் இருந்து துர்நாற்றம் வெளியேற துவங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, மீட்கப்படும் உடல்கள் அனைத்தையும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே வைத்துவிட்டு அதன்பிறகு தாங்களாகவே அடக்கம் செய்யும் நிலைக்கு நேபாள பேரிடர் மீட்பு படை தள்ளப்பட்டிருக்கிறது.

முன் எச்சரிக்கை நடவடிக்கை
ஒருவேளை எதிர்காலத்தில் உடல்களுக்கு உரிமை கோரி யாரேனும் வந்தால், அடையாளம் காண வசதியாக மீட்கப்பட்ட உடல்களில் இருந்து டி.என்.ஏ. மாதிரி, கைரேகை, கருவிழி உள்ளிட்ட மாதிரிகளை மருத்துவர்கள் சேகரித்து வைப்பதோடு, ஒவ்வொரு உடலுக்கு பிரத்யேக எண்ணையும் ஒதுக்கி ஆவணப்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி உடல்களை மீண்டும் தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும் என்கின்றனர் நேபாள சுகாதாரத்துறை அதிகாரிகள்.

டிஎன்ஏ பரிசோதனை
ஒவ்வொரு குழிக்கும் இடையே 40 செமீ இடைவெளி விடப்படுவதாகவும், உடல் புதைக்கப்பட்ட பிறகு பிரத்யேக எண் பொறித்த பலகையை நட்டு கான்கிரீட் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, அடக்கம் செய்யப்படும் நடைமுறைகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காணாமல் போன தங்கள் உறவினர்களைத் தேடும் நபர்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் DNA மாதிரிகளை வழங்க வேண்டியிருக்கும்.

DNA பரிசோதனை முடிவுகள் வந்தவுடன், நேபாள சுகாதாரத் துறை அவற்றை உடல்களிலிருந்து பெறப்பட்ட DNA-வுடன் ஒப்பிட்டு, அந்தந்த உடலுக்கான குறிப்பிட்ட எண்ணைக் கண்டறியும். அந்த எண்ணின் அடிப்படையில், உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது என்பதைத் துல்லியமாக அறிய காவல்துறை பதிவுகளைச் சரிபார்க்கும். அதன்பிறகு, உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved