Also Watch
Read this
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை திமுக முதல் ஆளாக அறிவித்துள்ளது. மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தலைமை எந்த அடிப்படையில் தேர்வு செய்துள்ளது? அவர்களை தேர்வு செய்ய யார் சிபாரிசு செய்துள்ளார்கள்?

மதுராந்தகம், தாராபுரம்...
2026 சட்டமன்ற தேர்தலில், ஆட்சியை கோட்டைவிட்ட விரக்தியில் இருந்தே திமுக இன்னும் மீளவில்லை என அரசியல் வட்டாரம் கூறும் நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மற்றும் ஒரு அரசியல் பரபரப்பு தொடங்கியுள்ளது. ஒருபக்கம் அதிமுகவின் கோட்டை, மறுபக்கம் தவெகவின் வரவு. இதற்கு மத்தியில் இந்த 2 தொகுதிகளிலும் போட்டியிடலாமா? அல்லது புறக்கணிக்கலாமா? என்ற கேள்வி திமுகவினருக்கு எழுந்ததாம்.

ஆனால், அதிமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் வெற்றிக்கனி நமக்கு கிட்டியே தீரும் என சில நிர்வாகிகள் நம்பிக்கை அளிக்க, போட்டியிடாவிட்டால் ஆளுங்கட்சிக்கு பயந்துவிட்டதாக வெற்று தம்பட்டம் அடிப்பார்கள், அதனால் வெற்றியோ தோல்வியோ ஒரு கை பார்த்துவிடலாம் என மீதி சில நிர்வாகிகள் தலைமைக்கு அறிவுரைகூற கடைசியில் போட்டியிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாம்.

பரந்தாமன், சுகன்யா
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு எடுப்பதில்தான் தாமதமே தவிர முடிவு எடுத்துவிட்டால் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டோம் என முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்தது திமுக.

பார்த்து பார்த்து தேர்வு
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுமே திமுகவை மண்ணை கவ்வ வைத்த தொகுதி தான். ஆனாலும், அங்கு வெற்றி பெற்று தங்களை யார்? என நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது திமுக தலைமை. இதற்காக வேட்பாளர்களையும் இளைஞர் அணியில் ஒருவர், மகளிர் அணியில் ஒருவர் என பார்த்து பார்த்தே தேர்வு செய்துள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் பரந்தாமன் திமுகவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர் என்பதோடு தலைமைக்கும் மிக நெருக்கம். திமுகவின் தலைமை கழக சட்டத்துறை இணை செயலாளராக உள்ள இவர் 2016ஆம் ஆண்டு தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல், 2021 தேர்தலிலும் எழும்பூர் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கனிமொழியும் சிபாரிசு
கடந்த தேர்தலில் சேகர்பாபுவின் தலையீட்டால்தான் பரந்தாமன் களம்காணும் வாய்ப்பையே இழந்ததாக கூறப்படும் நிலையில் சட்டமன்றத்தை எதிர்கொள்ளவும், துணிச்சலாக பேசவும் தற்போதைக்கு சரியான ஆள் இவர்தான் என திமுக தலைவரே பரந்தாமனை வேட்பாளராக தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், பரந்தாமனுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியுமே கடுமையாக சிபாரிசு செய்துள்ளாராம்.

வெற்றி பரிசு கிடைக்குமா?
தலைமையின் நேரடி சப்போர்டில் உள்ள பரந்தாமன் அதனை காப்பாற்றி வெற்றியை பரிசாக கொடுப்பாரா? என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும். ஆனால், இடைத்தேர்தலுக்கு தயாராக உள்ள 2 தொகுதிகளுமே திமுகவிற்கு இசையாத தொகுதியாக இருக்கலாம், ஆனால் அக்டோபர் முதல் இரண்டுமே எங்களுக்குதான் என அடித்துக்கூறி உள்ளார் பரந்தாமன். அதேபோல், தவெகவே மைனாரிட்டி கவர்ன்மெண்ட் அவர்களுக்கு என்ன பலம் இருந்துவிடும் என சீறியும் உள்ளார்.

வழக்கறிஞர் சுகன்யா...
கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான தாராபுரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுகன்யாவும் ஏற்கனவே சட்டமன்ற பொதுத்தேர்தலில் விருப்பமனு தாக்கல் செய்தவர்தான். அந்த தொகுதியின் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான மணிவாசகத்தின் மனைவியான சுகன்யா வழக்கறிஞராகவும் உள்ளார். இளைஞர்களின் ரத்தத்தை பாய்ச்சி கட்சியை கட்டமைக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் ரெக்கமெண்டேஷன்தான் சுகன்யாவை வேட்பாளர் லிஸ்ட்டில் இடம்பிடிக்க வைத்துள்ளதாம்.

அதுமட்டுமல்லாது, திமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சாமிநாதன் மற்றும் திமுக இளைஞரணி மண்டல பொறுப்பாளர் பிரகாஷ் ஆகியோரும் பரிந்துரை செய்துள்ளார்களாம். சுகன்யா என்னதான் வழக்கறிஞர் என்றாலும் உள்ளூர் பெண்களுடன் அளவளாவி அவர்களின் அன்பை பெற்றுள்ளவர் என்பதாலும் உள்ளூர் முகத்திற்கென ஓட்டு விழும் என்ற அடிப்படையிலும் தலைமை அவரை தேர்வு செய்துள்ளதாம்.
இப்படி, தலைமை ஒரு தொலைநோக்கு பார்வையில் வேட்பாளர்களை தேர்வு செய்திருந்தாலும் அது தேர்தல் முடிவு அறுவடையில் கை கொடுக்குமா என்பது மக்கள் கையில்தான் உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved