Also Watch
Read this
இருக்கிற சட்டப் பேரவையை வைத்து முதலில் நல்ல ஆட்சியை தருவதை விட்டுவிட்டு, மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா? என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

மூத்த தலைவர் டி.ராஜா...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜாவை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்த கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தவெக அரசின் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு கண்டனம் தெரிவித்தார். கனிமொழி கூறியதாவது;
இருக்கின்ற சட்டமன்றத்தில் இருந்து முதலில் ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும். அதன்பிறகு புதிய சட்டமன்றத்தைப் பற்றி சிந்திக்கலாம். கண்டிப்பாக சட்டமன்றத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால், கலைஞர் கட்டிய சட்டமன்றக் கட்டிடம் ஏற்கெனவே உள்ளது.

வரிப்பணத்தை வீண் ஆக்குவதா?
பின்னர், அது மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தாலும், அந்த இடம் சட்டமன்றத்திற்காகவே கட்டப்பட்ட இடம். எனவே, அதைக்கூட மீண்டும் பயன்படுத்தலாம். எதை கேட்டாலும் நிதி இல்லை, நிதி இல்லை என்று கூறும் ஆட்சியாளர்கள், மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதற்கான அனைத்து வழிகளையும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேலாவது மக்களின் வரிப்பணத்தை வீணாக்காமல், அதை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

தேவையற்ற இடைத்தேர்தல்
ஒரு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தவெக ராஜினாமா செய்ய வைத்துள்ளது. இன்று மீண்டும் ஒரு தேர்தல் வரக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. இவர்கள்தான் மக்களுக்கு நேர்மையான அரசியலைத் தரப்போகிறோம் என்று கூறிக் கொள்கிறார்கள். உண்மையில், இந்த இடைத்தேர்தல் என்பது முற்றிலும் அவசியமற்ற ஒரு தேர்தல்.
மக்களின் மீதும், வரிப்பணத்தின் மீதும் கேடு விளைவிக்கும் அளவிற்கு, தேவையற்ற இந்த இடைத்தேர்தலை மக்கள் சந்திக்க வேண்டிய சூழலை தவெக தான் உருவாக்கி உள்ளது. ஏற்கெனவே ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து, இன்று மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்.

தொடர் சம்பவங்கள்
தமிழ்நாடு முழுவதும் கொ*க் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், முதலமைச்சர் சட்டமன்றத்தில் இதற்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தால், அவர் பஞ்ச் டயலாக் பேசுவதும், பழைய கதைகளைச் சொல்வதும், இல்லாத பொய்களைச் சட்டமன்றத்தில் அரங்கேற்றுவதுமாக தான் அரசாங்கமே நடைபெற்று வருகிறது. மக்களின் தேவை மற்றும் பாதுகாப்பு குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் இந்த அரசு இயங்கி வருகிறது.
இவ்வாறு கனிமொழி எம்பி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved