Also Watch
Read this
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த கையோடு, திமுக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த தவெக தலைவர் விஜய், நம்பிக்கை இல்லாததால் இரு தொகுதிகளில் போட்டியிட்டதாக கூறும் திமுகவுக்கு, கொளத்தூரை பார்த்தும் கூடவா புரியவில்லை, ஆட்டம் போட்ட 15 திமுக அமைச்சர்களை தோற்கடித்ததை பார்த்துமா புரியவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்று, திமுக செய்த டீசண்ட் வெர்சன் வேலைகள் எல்லாம் ஊருக்கே அம்பலமாகி விட்டது என்ற விஜய், 1999ல் திமுகவும், பாஜகவும் எக்சேஞ்ச் செய்து கொண்டது போல, தவெக செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும் காட்டமாக பதிலடி கொடுத்து உள்ளார்.

சட்டப்பேரவையில் விவாதம்
சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு, தன் மீதான விமர்சனங்களுக்கு நீண்ட நெடிய விளக்கத்தை அளித்து முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டார். இதுவரை இல்லாத வகையில் சட்டமன்ற நிகழ்வுகள் முழுக்க முழுக்க நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய விஜய், எதையும் மறைக்கவில்லை, ஒளிக்க வில்லை என்பதற்கு உறுதியான சான்று தான் இது என கூறியிருக்கிறார். தவெக பெரும்பான்மை பெறவில்லை என பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய், 2006ல் 100 சதவீத வாக்குகளுடன் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்கு சதவீதம் இவ்வளவு தான்
தவெகவுக்கு 34.92 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், எதிர்க்கட்சியான திமுக, கூட்டணி கட்சி ஓட்டுகளை வாங்கி தான் சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது என்ற விஜய், திமுக தனித்து வாங்கிய ஓட்டு சதவீதம் வெறும் 24.19 சதவீதம் தான் என குறிப்பிட்டுள்ளார். தவெக வாங்கியதை விட திமுக வாங்கிய வாக்குகள் 10 சதவீதம் குறைவு எனக் கூறியுள்ள தவெக தலைவர் விஜய், எல்லாம் தெரிந்தும் புள்ளி விபர புலி போல திமுக பேசுவதை எப்படி எடுத்துக் கொள்வது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தவெகவை 3 கோடியே 21 லட்சம் பேர் நிராகரித்து விட்டதாக திமுக கூறுகிறது என்ற முதலமைச்சர் விஜய், அப்படி பார்த்தாலும் கூட திமுக தேவையே இல்லை என 76 சதவீத மக்கள் தீர்க்கமாக முடிவு எடுத்திருக்கிறார்கள் எனவும், 35 சதவீத ஆதரவு பெற்ற கட்சியை பார்த்து ஏளனமாக பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.

டீசண்ட் வெர்சன் வேலைகள்
மக்கள் மீது கடன் சுமையை ஏற்றி வைத்து விட்டு, வளர்ச்சிக்காக பெற்ற கடன் என்று, வாய் வித்தை காட்டும் திமுக, நம்மை பார்த்து எம்.எல்.ஏ.க்களை கடன் வாங்கி ஆதரவு பெற்றதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது எனவும், மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் தான் தவெக ஆட்சி அமைய கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன என்றும் விஜய் தெரிவித்து உள்ளார். தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சி அமைந்து விடவே கூடாது என திமுக செய்த டீசண்ட் வெர்சன் வேலைகள் அம்பலமாகி விட்டது எனக் கூறியுள்ள விஜய், ஆனால் தவெக ஆட்சிக்கு தடையாக இருக்க மாட்டோம் என பெருந்தன்மை பாடலை கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவது வேறு ரகம் என சாடியுள்ளார்.

2 தொகுதிகளில் போட்டி ஏன்?
ஆக்கப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாங்கள் என்ற முதலமைச்சர் விஜய், தவெகவுக்கு எதிராக சொத்தை வாதங்களை வைத்து மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன திமுக, தற்போது சட்டமன்றத்திலும் அதையே செய்து வருகிறது என விமர்சித்துள்ளார். நம்பிக்கை இல்லாததால் தான் இரு தொகுதிகளில் போட்டியிட்டதாக தன்னை கூறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு, தவெகவின் வெற்றி வீச்சு எப்படி இருந்தது என கொளத்தூரை பார்த்தும் கூடவா புரியவில்லை, அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்ட திமுக அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியை பார்த்தும் கூடவா புரியவில்லை என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார் விஜய்.

தேம்பி அழ வேண்டாம்
அதோடு, மக்கள் மீது அக்கறையாக இருப்பது போல திமுக டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என காட்டமாக கூறியுள்ளார் தவெக தலைவர் விஜய். அதோடு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு அளித்தது குறித்த திமுக விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள விஜய், 1999ல் பாஜக கூட்டணிக்கு திமுக ஆதரவு அளித்ததை மக்கள் யாரும் மறக்கவில்லை எனவும், பாஜக உடன் கூட்டணி பேசி அமைச்சர் பதவி வாங்கியதையும் மக்கள் மறக்க வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புகை கக்கி கொண்டிருக்கிறது
தவெக அரசுக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிவித்து விட்டு தான் ஆதரவு அளித்து இருக்கிறார்கள் என்ற விஜய், திமுகவும், பாஜகவும் 1999ல் சேஞ்ச் என்று கூறி எக்சேஞ்ச் செய்து கொண்டது நாட்டு மக்கள் அறிவார்கள் என சுட்டிக் காட்டி உள்ளார். திமுக போல எதையும் எக்சேஞ்ச் செய்து கொள்ள வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ள முதலமைச்சர் விஜய், மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிய தவெக அரசை பார்த்து புஷ்பா அரசு என ஏளனமாக பேசியிருக்கிறது எனவும், மக்கள் கொடுத்த தோல்வியால் கண், காது, வாய், மூக்கில் திமுக புகை கக்கி கொண்டிருக்கிறது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

திமுக அலற போவது உறுதி
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், புலம்பட்டும். அதைப் பற்றி கவலைப்படவே தேவையில்லை என்ற விஜய், மேஜிக் நம்பர் இல்லை என கூறும் திமுக, மக்கள் நலன் சார்ந்து நாம் செய்யப் போகும் மேஜிக்கலான, மிராக்கிளான காரியங்களை பார்க்க தான் போகிறார்கள் என தவெக விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டுமே நாம் நம்பி இருப்பதாக தனது ரீல் அறுந்து போனது தெரியாமலேயே திமுக திமிராக பேசிக் கொண்டிருக்கிறது என்ற முதலமைச்சர் விஜய், தோல்வியில் மூழ்கி திக்கி திணறிக் கொண்டிருக்கும் திமுக நம் மீது சேற்றை வாரி இறைத்தாலும் கண்டு கொள்ளப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். மக்கள் நலன் சார்ந்த செயல்கள், திட்டங்களில் கவனம் செலுத்தி, சமூக நீதி கொள்கையில் உறுதியாக இருக்கும் நம் அரசை பார்த்து ஆற்றாமையில் திமுக அலற போவது உறுதி எனக் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் விஜய்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved