Also Watch
Read this
பட்டிமன்றங்கள் மூலமாக தமிழின் பெருமையை, கலாச்சாரத்தை உலகம் எங்கும் கொண்டு சென்ற தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானர். உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அவரது மறைவுக்கு தலைவர்களும், பிரமுகர்களும் புகழ் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

"அன்பு பெரியோர்களே, அருமை தாய்மார்களே..."
இந்த குரல் இனி ஒலிக்காது. பட்டிமன்றங்களை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார். மதுரை மாவட்டம் சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு பிறந்த சாலமன் பாப்பையா, வறுமைக்கு இடையிலும் கல்வியை செம்மையாக கற்றவர். அவர் பிறந்து வளர்ந்த காலத்தில் தமிழகத்தில் தாய் மொழி உணர்வு தழைத்து ஓங்கி இருந்தது.

இளம் வயதிலேயே...
வளரும் காலத்திலேயே தமிழின் மீது பெரும் பக்தி கொண்டு வளர்ந்த சாலமன் பாப்பையா, படித்து பட்டம் பெற்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராக பணியில் இணைந்த பின், தமிழை வளர்க்கும் பொறுப்பில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவரது இளமை பருவத்தில் தமிழகத்தில் விழாக்கள் தோறும் பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள் நடைபெறுவது வழக்கம். தமிழாசிரியரான பாப்பையா, அந்த நிகழ்வுகளில் தம்மையும் இணைத்துக் கொண்டார். குன்றக்குடி அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றங்களில் பேச்சாளராக மேடையேறிய அவர், பின்னாளில் பட்டிமன்ற நடுவராக குன்றக்குடி அடிகளாரால் முன்மொழியப்பட்டார்.

சாமானியரும்...
ஆற்றொழுகு தமிழில் , பாமரர்களும் புரிந்து கொள்ளும் மொழி நடையில், பிற மொழி சொற்கள் சிறிது கூட கலக்காமல் மணிக்கணக்கில் பேசும் வல்லமை பாப்பையாவுக்கு இயல்பாகவே இருந்தது. பெரும் தமிழ் அறிஞர்கள், தமிழ் புலமை மிக்கவர்கள், தமிழார்வம் கொண்டோருக்காக மட்டுமே நடைபெற்று வந்த பட்டிமன்றங்களை, பாமர்களிடம் கொண்டு சேர்த்தவர் பாப்பையா.

மாபெரும் வரவேற்பு
எளிமையான தமிழில், மக்களுக்கு புரியும் தலைப்புகளில் அவரது பட்டிமன்றங்கள் அமைந்திருந்தன. குடும்பத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பது கணவனா, மனைவியா? என்பது போன்ற அவரது பட்டிமன்றங்கள், வெகுஜன ரசனையோடு ஒத்து போனதால் பெரும் வரவேற்பை பெற்றன.

பன்முக திறமை
பட்டிமன்றங்களில் நகைச்சுவை கலந்து, தமிழறிவை, உலக ஞானத்தை, நாட்டு நடப்பை சொல்வதில் பாப்பையாவுக்கு நிகர் அவர் மட்டுமே. பட்டிமன்ற நடுவராக மட்டுமின்றி, எழுத்தாளராக, உரையாசிரியராக, பேச்சாளராக, நடிகராக பன்முக திறமை கொண்டவர் பாப்பையா.

மறைந்தாலும் மறையாது...
கிட்டத்தட்ட 12,000 பட்டிமன்றங்களை நடத்தி உள்ள அவர், பல்வேறு பேச்சாளர்கள் உருவாகும் பயிற்சி பள்ளியாகவும் இருந்தார். 90 வயதை கடந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக காலமான அவருக்கு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி ரஜினி உள்ளிட்ட திரை உலக பிரமுகர்கள், தமிழிஞர்கள் புகழ் அஞ்சலி செலுத்தி உள்ளனர். சாலமன் பாப்பையா மறைந்தாலும், தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் என்றும் மறையாது.

சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதை
மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு இன்று காலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தத்தனேரி சுடுகாட்டில் உடல் எரியூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என, பல்வேறு தரப்பினரும் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved