Also Watch
Read this
பாலியல் விவகாரத்தில், போக்சோ வழக்கில் வீரமணி மற்றும் அவரது விசுவாச தம்பதியை தொடர்ந்து, கணேசன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், முக்கிய புள்ளிகளுக்கான செட்டில்மெண்ட் பிராஜக்டை அவர்தான் செய்து முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. S.R.M.U. ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கண்ணையாவின் மகனுக்கு நெருங்கிய நண்பர்தான் கணேசன் எனவும் கூறப்படும் நிலையில் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுகிறது.

அதிகரிக்கும் அதிர்ச்சி
வன்கொடுமையை அரங்கேற்றவே சொகுசு பங்களா, பார்த்து பார்த்து பணி விடைகளை செய்ய ஸ்பெஷலாக தம்பதி, பட்டியலின சிறுமிகளே முதல்குறி, சிறுமிகளை கவர்ந்திழுக்க பரிசுகள் மற்றும் புத்தாடைகள், விவகாரத்தை மூடி மறைக்க முக்கிய புள்ளிகளுக்கு பெருந்தொகை என பாலியல் வழக்கால் தமிழ்நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தி உள்ள பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பாக ஏற்கெனவே வெளியாகி உள்ள தகவலின் அதிர்ச்சியே அடங்கவில்லை. அதற்குள், அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகளும் மேலும் அதிரவே வைக்கிறது. வீரமணி மற்றும் மகேந்திர சிம்ஹன்-சாந்தி தம்பதி ஏற்கெனவே காவல்துறையின் விசாரணைவளையத்தில் உள்ள நிலையில் கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலதுகரமாக இருந்தவர்...
மகேந்திர சிம்ஹன் - சாந்தி தம்பதியை போன்றே வீரமணிக்கு வலதுகரமாக இருந்தவர் தான் கணேசன். தலைக்கு மேல் பறப்பது வெள்ளை காகம்தான் என வீரமணி சொன்னால் அதற்கு இல்லை காகத்தின் நிறம் கருப்புதான் என மறுக்ககூட மனம் வராத அளவுக்கு கொடுத்த பிராஜக்டை கச்சிதமாக செய்து முடிப்பதுதான் கணேசனின் வேலையாம். தன்மீதான வழக்கை சத்தமின்றி முடிப்பதற்காக வீரமணி ஈசிஆரில் இருந்த தனக்கு சொந்தமான ரூ.130 கோடி மதிப்புள்ள நிலத்தை அவசரத்திற்காக அடிமாட்டு விலைக்கு, அதாவது வெறும் ரூ.70 கோடிக்கு விற்றதாகவும், அதனை கணேசனிடம் ஒப்படைத்து யார் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டுமோ கொடுத்து வழக்கை முடிக்கப்பார் என கண்ணை காட்டியதாகவும் கூறப்படுகிறது.

காவல் அதிகாரிகளுக்கு...
இதன்படியே, காவல்துறை உயரதிகாரிகள் முதல் அரசியல் புள்ளிகள் வரை கணேசன் தான் பணத்தை பக்குவமாக பிரித்து செட்டில்மெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கூடுதல் அதிர்ச்சி தகவல் S.R.M.U. ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கண்ணையாவின் மகனான பிரகாசுக்கு கணேசன் நெருங்கிய நண்பர் என்பதுதான். அதனால், கண்ணையாவின் மகனான பிரகாசுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அவரையும் போலீஸ் விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

செல்போனில் ஆபாச வீடியோ
இதுமட்டுமல்லாது, மேலும் பல முக்கிய புள்ளிகளும் கைதுக்கான வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பதாக ஏற்கெனவே கைதானவர்களின் வாக்குமூலங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. இது ஒருபுறமிருக்க, கணேசனின் செல்போனில் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் ஆபாச வீடியோ இருந்ததாகவும், அதுகுறித்து வாயே திறக்கவில்லை எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

வீடியோ காட்சிகள் எங்கே?
இதனிடையே, வீரமணி வழக்கில் அடுத்தடுத்து பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுகிறது. பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிப்பதற்காக சம்மந்தப்பட்ட போயஸ் கார்டனில் உள்ள வீட்டிற்கு உதவி ஆணையர் யாஸ்மின், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் சென்றதாகவும், அவர்களுடன் விசாரணையின்போது ஒளிப்பதிவு செய்வதற்காக ஒரு காவலர் சென்றதாகவும் கூறப்படும் நிலையில் அந்த வீட்டின் முதல் தளத்தில் சாந்தி மட்டும் இருந்ததாகவே தெரிகிறது.

வீரமணி பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றிய அறை முதல் அத்தனை ரகசியங்களையும் ஒன்றுவிடாமல் சாந்தி ஒப்பித்ததாகவும், அதனை காவலர் கேமராவில் பதிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்படியானால், அந்த வீடியோ காட்சிகள் எங்கே? காவலர் பதிவு செய்த வீடியோ தற்போதைய விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதா? சாந்தியை விசாரித்தபோது என்ன நடந்தது? என்ற கேள்விகள் எழுகிறது.

காவலர் சென்றது ஏன்?
இதுஒருபுறமிருக்க, ஒளிப்பதிவாளராக ஒரு காவலர், உதவி ஆணையர் யாஸ்மின், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோருடன் சென்றது உண்மைதான், ஆனால் சாந்தியிடம் நடந்த விசாரணையை வீடியோ பதிவு செய்யவே இல்லை என்ற மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

வீடியோவே எடுக்கவில்லை எனில் அங்கு ஒளிப்பதிவாளராக குறிப்பிட்ட அந்த காவலர் சென்றது ஏன்? வழக்கு தொடர்பான ஆதாரத்தை மறைக்க வேண்டுமென்றே வீடியோ பதிவு செய்யப்படவில்லையா?

விசாரணையின் முடிவில்...
விசாரணை குழுவிடம் வீடியோவே அளிக்கப்படவில்லை என்றால் ஒளிப்பதிவாளராக அவதாரமெடுத்து கேமராவும் கையுமாக சென்ற காவலரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்களா? வெறும் கண் துடைப்புக்காக மட்டும்தான் விசாரணைக்கு சென்றார்களா? என அடுக்கடுக்கான சந்தேகங்களும் எழுகிறது. இதற்கு, ஒளிப்பதிவாளரான அந்த காவலரை சுற்றி வளைத்தால் தான் அத்தனை சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved