Also Watch
Read this
பல கோடி ரூபாய் மதிப்புள்ள குடும்ப சொத்தை சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கே தெரியாமல் எழுதிக்கொடுத்த புகாரில், நாயுடு ஹால் உரிமையாளர் வேணுகோபால் மற்றும் பத்திரப்பதிவு செய்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
இதேபோன்று பல நிலங்களை போலி பத்திரம் மூலம் நாயுடு ஹால் உரிமையாளர் வளைத்துப் போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளதால் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

சிறிய இடத்தில்...
1939ஆம் ஆண்டு ஒரு சிறிய தையல் இயந்திரத்துடன் தொடங்கப்பட்டு தமிழகத்தின் முன்னணி ஆடை பிராண்டுகளின் நிறுவனமாக உருவெடுத்து நிற்பதுதான் நாயுடு ஹால்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த எம்.ஜி.நாயுடு தி.நகரில் கடையை தொடங்கி பின்னர், பாண்டி பஜாருக்கு மாற்றிய நிலையில் அவரது மறைவுக்குப்பிறகு அவருடைய மகன்களான ஜி.சுகுமார், வேணுகோபால் மற்றும் ராமசாமி ஆகியோர் இந்த வணிகத்தை வழிநடத்தினர்.

மகள் கொடுத்த புகார்
இந்நிலையில் தான், இவரது குடும்பத்தில் சொத்து பிரச்சினை வெடித்து வழக்காக பதிவாகி உள்ளது. ராமசாமியின் மகள் பூர்ணிமாதான் இந்த புகாரை கொடுத்துள்ளார்.
எம்.ஜி.நாயுடுவின் மனைவியான ஜெயலட்சுமி உயிருடன் இருந்தபோது, திருப்பத்தூர் மாவட்டம் கைலாசகிரி என்ற இடத்தில் 7 சென்ட் நிலம் வாங்கி, ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்பின், ராமசாமியும் அவரது சகோதரர் வேணுகோபாலும் இணைந்து அந்த 7 சென்ட் நிலம் அருகிலேயே மேலும் 10 சென்ட் நிலத்தை வாங்கி அதே சார் பதிவாளர் அலுவலகத்திலேயே பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
அதன்பிறகு சில காலங்களிலேயே வயதுமூப்பு காரணமாக ஜெயலட்சுமி உயிரிழக்க, பூர்ணிமாவின் தந்தை ராமசாமியும் உயிரிழந்தார். அதேபோல், அடுத்த சிலஆண்டுகளிலேயே ராமசாமியின் மனைவி சுசீலாவும் உயிரிழந்துவிட்டார்.

தான செட்டில்மென்ட்...
இந்நிலையில், தற்போது நாயுடு ஹால் நிறுவனத்தை நடத்தி வரும் வேணுகோபால், தனது மகளான நந்திதாவுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அந்த 17 சென்ட் நிலத்தை தான செட்டில்மென்டாக கொடுத்ததாக தெரிகிறது. அந்த இடத்தில் நந்திதா தொழிற்சாலையும் நடத்தி வருகிறார்.
குறிப்பிட்ட அந்த 17 சென்ட் நிலத்திற்கு தானும், தனது சகோதரர் அரவிந்தும் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்கள் என்றும் தங்களுக்கு தெரியாமலேயே வேணுகோபால் அவரது மகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டதாகவும் புகார் அளித்துள்ளார் பூர்ணிமா.
கடந்த ஆகஸ்ட் மாதம் எதேட்சையாக ஊருக்கு சென்றபோதுதான் சொத்து எழுதிக்கொடுத்த விவரமே தங்களுக்கு தெரியவந்துள்ளதாக கூறியுள்ள பூர்ணிமா, அதுகுறித்து கேட்டபோது வேணுகோபால் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

அதிகாரிகள் மீதும் நடவடிக்கை
சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கே தெரியாமல் கூட்டுச்சதி செய்தும், போலி ஆவணங்கள் மூலமும் குடும்ப சொத்தை அபகரித்த வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு உடந்தையாக அப்போது பணியில் இருந்த ஆம்பூர் சார் – பதிவாளர், தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூர்ணிமா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு காவல்துறையிடம் அவர் புகார் அளித்த நிலையில் அது திருப்பத்துார் மாவட்டம் உமராபாத் காவல் நிலைய விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு
போலி பத்திரப்பதிவு செய்து நில மோசடி செய்த தொழிலதிபர் வேணுகோபால் நாயுடு, அவரது மகள் நந்திதா, அப்போதைய ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியரும் தற்போது வட்டாட்சியராக பணியாற்றி வரும் பாரதி, கைலாசகிரி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், அப்போதைய சார்-பதிவாளர் ரமணன் மற்றும் பத்திர எழுத்தாளர் நந்தகுமார் ஆகிய 6 பேர் மீது உமராபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்று, மேலும் சில இடங்களை வேணுகோபால் நாயுடு தரப்பினர் போலி ஆவணங்கள் மூலம் பெயர் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved