news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திமுகவில் OPS ஐக்கியம், அம்மா TO தளபதி
tv

Also Watch

tv

Read this

திமுகவில் OPS ஐக்கியம், அம்மா TO தளபதி

யாருக்கு பலம்? யாருக்கு பலவீனம்?

44

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாதை எங்கு தொடங்கும், பயணம் எங்கு முடியும் என தெரியாமல் குழப்பத்திலேயே வண்டியை ஓட்டி வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒரு வழியாக இறுதி முடிவு எடுத்து, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அம்மாவின் விசுவாசி என வார்த்தைக்கு வார்த்தை பேசி வந்த ஓ.பன்னீர் செல்வம், அறிவாலாய விசுவாசியாக மாறியிருக்க, அன்றில் இருந்து இன்று வரை ஓ.பி.எஸ். கடந்து வந்த பாதை என்னென்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஆரத்தழுவி அன்பை பொழிந்தார்
சந்திரமுகி திரைப்படத்தில், ஜோதிகா பேயாக மாறியதற்கு ரஜினி கூறும் வசனம் போல, அதிமுகவின் உட்சபட்ச பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது திமுகவின் அடிப்படை உறுப்பினராக மாறியிருப்பது தான் விசித்திர தந்திரம்.

அதிமுகவில் மீண்டும் ஐக்கியமாக வழி தெரியாமல் முழித்து கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், எதிர்பார்த்தபடியே திமுகவில் இணைந்திருக்கிறார். சென்னை அக்கார்டு ஹோட்டலில் வைத்து ஓ.பன்னீர் செல்வத்துடன் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு இருவரும் ஓ.பி.எஸ்.ன் காரில் ஒன்றாக புறப்பட்டு அண்ணா அறிவாலயம் சென்றனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் ஆரத்தழுவி அன்பை பொழிந்தார்.

திமுக தான் ஆட்சிக்கு வரும்
பின்னர் இருவரும் கை குலுக்கிக் கொள்ள, உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு முறைப்படி திமுகவில் இணைந்து கொண்டார் ஓ.பி.எஸ். இதனை தொடர்ந்து அவரது மகன் ரவீந்திரநாத்தும், ஆதரவாளர் உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்து கொண்டனர். இதனையடுத்து நேராக தலைமைச் செயலகம் சென்ற ஓ.பி.எஸ். மற்றும் ஐயப்பன், தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தாய் கழகத்தில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என பூரிப்படைந்தார். அதோடு, எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என்ற ஓ.பி.எஸ். இனிமேல் இ.பி.எஸ். ஆட்சிக்கு வரவே கூடாது எனவும், மீண்டும் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தான் ஆட்சிக்கு வரும் எனவும் திட்ட வட்டமாக கூறினார்.

OPS-க்கு வரவேற்பு
ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரை தாங்கிய ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருக்கிறார் என புகழாரம் சூட்டியிருக்கிறார். தந்தை பெரியாருக்கு தளபதியாக நீதிக் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தை குறிப்பிட்டு OPS-க்கு வரவேற்பு பதிவிட்டிருக்கிறார் முதலமைச்சர்.

அதிமுகவில் அசைக்க முடியாத சக்தி
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் பாதை எங்கெங்கோ சென்று கடைசியில் அறிவாலயத்தில் வந்து முடிந்திருக்கிறது. எப்போது பார்த்தாலும் எம்.ஜி.ஆரும். ஜெயலலிதாவும் இரு கண்கள் எனக் கூறி வந்த ஓ.பி.எஸ்., எம்.ஜி.ஆர்.க்கும், ஜெயலலிதாவுக்கும் வாழ்நாள் எதிரியாக இருந்த திமுகவில் இணைந்திருப்பது தான் விசித்திரம். தேனியில் தேநீர் கடை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர். மீதிருந்த பற்று காரணமாக அதிமுகவில் இணைந்து செயல்பட தொடங்கினார்.

ஜெயலலிதா சிறைக்கு சென்ற இக்கட்டான நேரத்திலும், ஜெயலலிதா மறைவின் போதும் முதலமைச்சர் நாற்காலி ஓ.பி.எஸ்.க்கு தான் கிடைத்தது. ஜெயலலிதா இருந்த வரையிலும் அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார் ஓ.பி.எஸ். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ். அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனம் ஆகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவிடம் இருந்து முதலமைச்சர் நாற்காலியை தக்க வைக்க தர்ம யுத்தம் நடத்தினார். ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது போல சசிகலாவுக்கு தண்டனை கிடைத்து சிறைக்கு செல்ல, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்.

சசிகலா சிறைக்கு சென்றதும் இ.பி.எஸ். உடன் இணைந்த ஓ.பி.எஸ். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். அதோடு, துணை முதலமைச்சர் பொறுப்பிலும் இருந்தார். ஆனால், ஆசை யாரை விட்டது. கையில் கிடைத்த பொறுப்பை தக்க வைக்காமல், அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சி செய்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. 5 முறை எம்.எல்.ஏ. மூன்று முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தாலும் அரசியல் சாணக்கியத்தனம் தெரியாமல் போனது கடைசியில் அவரது அரசியல் வாழ்க்கையை தான் கேள்விக்குறியாக்கியது.

திமுகவின் பி டீம் ஓபிஎஸ்
ஓ.பி.எஸ். இருக்கும் போதே ஒற்றைத் தலைமை என்ற குரல்கள் அதிமுகவில் எழ தொடங்கியது. பொதுக்குழுவும் கூட்டப்பட்டது. வானகரத்தில் பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போதே, எம்.ஜி.ஆர். மாளிகைக்குள் புகுந்த ஓ.பி.எஸ். மற்றும் அவரது தரப்பு ஆட்கள், அதிமுக அலுவலகத்தை சூறையாடி சீல் வைத்தனர். இது அதிமுகவினருக்கு ஓ.பி.எஸ். மீது இருந்த மிச்சம், சொச்சம் மரியாதையையும் இல்லாமல் போக செய்தது. அப்போதே, ஓ.பி.எஸ். மீது திமுக சாயமும் விழுந்தது. ஓ.பி.எஸ்.க்கு துரோகி பட்டம் சூட்டி, எடப்பாடி பழனிசாமி கொதித்தெழ, திமுகவின் பி டீம் ஓபிஎஸ் என அதிமுகவினர் பொங்கி எழுந்தனர்.

பாஜகவும் கடைசியில் கழற்றி விட்டது
எம்.ஜி.ஆர். மாளிகை அடித்து நொறுக்கப்பட்ட அன்றே ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டனர். அதற்கு பிறகு பாஜகவின் உதவியோடு எத்தனையோ முறை அதிமுகவில் சேர முயற்சி செய்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், கடைசி வரைக்கும் OPS-ஐ இணைத்துக் கொள்ள முடியாது என எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்க, பாஜகவும் கடைசியில் ஓ.பி.எஸ்.ஐ கழற்றி விட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். எடுத்த நடவடிக்கைகளுக்கு பாஜக கை கொடுக்காமல் போக, அதிமுகவின் கரை வேஷ்டி கூட கட்ட முடியாத பரிதாப நிலைக்கு ஆளாகினார் ஓ.பி.எஸ்.

OPS விவகாரத்தில் கை கொடுக்குமா?
ஓ.பி.எஸ்.ஐ வளர்த்து விடுவது எந்த அளவிலும் பிரயோஜனம் இல்லை என புரிந்து கொண்டு பாஜகவும் விலகி விட்டது. இதனையடுத்து அதிமுகவை மீட்பதாக செயல்பட்டு வந்த உரிமை மீட்புக் குழு தற்போது அறிவாலயத்தில் ஐக்கியமாகி விட்டது. குறிப்பாக, வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் வரிசையில் ஓ.பன்னீர் செல்வத்தை திமுக இணைத்துக் கொண்டிருப்பது, முக்குலத்தோர் சமூக பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருந்தாலும், அது OPS விவகாரத்தில் கை கொடுக்குமா? என்பது தேர்தலில் தான் தெரியவரும். ஏனென்றால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வத்தால் 2ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது. முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியிலேயே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு குறைந்து போனதையே 2024 தேர்தல் முடிவுகள் காட்டின.

கடுமையான விமர்சனங்கள்
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட ஓ.பன்னீர்செல்வம், தற்போது இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்க இருக்கிறார். திமுகவில் இணைந்த ஓ.பி.எஸ். மூன்று தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் திமுக தலைமை போடிநாயக்கனூர் தொகுதியை மட்டுமே ஒதுக்க முன் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
துணை முதலமைச்சராக இருந்த போது திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கும் ஓ.பி.எஸ். கடைசியில் திமுகவிலேயே இணைந்திருக்கிறார். இது மட்டுமல்லாமல், ஓ.பி.எஸ்.க்கு எதிராக திமுகவினரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள். பாஜகவின் அடிமை என OPS-க்கு முத்திரை குத்தியதும் திமுகவினர் தான்.

அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை
ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் மோசமாக நடத்திய கட்சி திமுக என முழங்கிய வாயாலேயே, திமுகவை போற்றி புகழும் பாக்கியம் அம்மாவின் விசுவாசியாக அறியப்பட்ட OPS தவிர வேறு யாருக்கும் கிடைக்காது தான். அதேபோல, சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் தாங்கிய லெட்டர் பேடுடன் அறிக்கை வெளியிட்டு வந்த OPS மகன் ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்திருப்பது அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை புரிய வைத்தாலும், ஓ.பி.எஸ். அளவுக்கு சென்று விடக் கூடாது என்பதே நிதர்சனம். பழக்க தோஷத்தில் கலைஞர் நினைவிடத்தில் தர்ம யுத்தம் செல்லாத வரை எஞ்சிய ஓ.பி.எஸ்.ன் அரசியல் வாழ்க்கைக்கு எந்த பங்கமும் இல்லை என நம்பலாம்.

Related Link
இபிஎஸ் சர்வாதிகாரி, ஓபிஎஸ் தாக்கு

இபிஎஸ் சர்வாதிகாரி, ஓபிஎஸ் தாக்கு

            

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி

2
41 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved