Also Watch
Read this

உங்கள் போட்டி மற்றவர்களுடன் அல்ல, உங்களுடனேயே தான் என்று பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

டெல்லி ஐஐடி பட்டமளிப்பு விழா
டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் IIT Delhi, 57ஆவது பட்டமளிப்பு விழா, இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

587 பிஎச்.டி ஆய்வாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறந்த கல்வித் திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்குக் குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம், இயக்குநர் தங்கப் பதக்கம், சங்கர் தயாள் சர்மா தங்கப் பதக்கம் மற்றும் 'பெர்ஃபெக்ட் டென்' தங்கப் பதக்கங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

பெண்களின் எண்ணிக்கை குறைவு
பதக்கம் வென்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கல்வி மற்றும் தொழில்முறை சாதனைகளில் பெண்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாழ்க்கையில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், தேடலை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருங்கள், கற்றுக்கொள்பவர்களே வெற்றி பெறுகிறார்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களின் தாக்கத்தால், மற்றவர்களின் சம்பளம், பணி, ஸ்டார்ட்-அப் சாதனைகளுடன் உங்களை நீங்களே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்றும்,
வாழ்க்கை ஒரு லீடர்போர்டு அல்ல, உங்கள் போட்டி மற்றவர்களுடன் அல்ல, உங்களுடனேயே தான் என்றும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

செமிகண்டக்டர், விண்வெளி மற்றும் ட்ரோன் போன்ற புதிய துறைகளில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நாட்டைத் தற்சார்புடையதாக மாற்றி 'வளர்ந்த இந்தியா'வை உருவாக்கப் பங்களிக்குமாறு, பிரதமர் மோடி இளைஞர்களைக் கேட்டுக் கொண்டார்.

சூப்பர் கம்ப்யூட்டிங் வசதி
டெல்லி ஐஐடியின் சோனிபட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, செயற்கை நுண்ணறிவால் AI இயங்கும் 'பரம் பிரக்யா' என்ற அதிநவீன உயர் செயல்திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டிங் வசதியைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த வசதி ஏஐ, தரவு அறிவியல் மற்றும் மேம்பட்ட கணினி ஆய்வு துறைகளில் கல்வி நிறுவனத்தின் திறனைப் பெருமளவு மேம்படுத்தும் என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved