Also Watch
Read this

நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி இன்ஸ்டாவில் புதிய வீடியோவை வெளியிட்டு, அழைப்பு விடுத்துள்ளார்.
80ஆவது சுதந்திர தின விழா
இந்தியாவின், 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் மோடி, பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பொது மக்களிடையே தேசபக்தியை வளர்க்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தின் கீழ் இந்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல்...
இந்த ஆண்டிற்கான ஹர் கர் திரங்கா இயக்கம், ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இயக்கம், நமது தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அதன் ஆன்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அழைப்பு
பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கங்களில், கூறி இருப்பதாவது;
நமது மூவர்ணக் கொடி நமது பெருமை. அது நமக்கு உத்வேகம் தருகிறது. 'ஹர் கர் திரங்கா, ஹர் மன் திரங்கா' என்ற முழக்கத்தோடு ஒவ்வொரு வீட்டிலும் கொடியேற்றுவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

வளர்ச்சியடைந்த இந்தியா
சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, ’வளர்ச்சியடைந்த இந்தியா’ சபதத்தை ஏற்குமாறும் பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 9 முதல் 17ஆம் தேதி வரையிலான நாட்களில் அவரவர் வீட்டில் தேசியக் கொடியை முறைப்படி ஏற்றிப் பறக்கவிடலாம்.

டிஜிட்டல் சான்று...
ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றிய தேசியக் கொடியுடன் ஒரு செல்ஃபி எடுத்து, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Har Ghar Tiranga Website பக்கத்தில் பதிவேற்றலாம். இந்த புகைப்படத்தைப் பதிவேற்றியவுடன், மக்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படும் அரசு டிஜிட்டல் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved