Also Watch
Read this
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஒன்றரை வயது பெண் குழந்தையின் உடல், தானம் செய்யப்பட்ட நிலையில், இதன் மூலம் 3 குழந்தைகள் மறுவாழ்வு பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமிக்கு மூளைச்சாவு
விழுப்புரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, Hydrocephalus என்ற நோயினால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தது. மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் சிறுமியை காப்பாற்ற முடியாத நிலைக்கு சென்றது. ஒருகட்டத்தில் சிறுமி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டு விட்டது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்ய முடியும் என்பதால் மருத்துவர்கள், கனத்த இதயத்துடன் சிறுமியின் பெற்றோரை அணுகி உள்ளனர்.

சமூக பொறுப்புணர்வுடன்...
பிஞ்சுக்குழந்தையை இழந்த பெற்றோர், அளவிட முடியாத துயரத்தில் இருந்த போதிலும், மிகுந்த மனிதாபிமானம் மற்றும் சமூக பொறுப்புணர்வுடன் உடலுறுப்பு தானத்திற்கு சம்மதித்தனர்.

இதன்படி, குழந்தையின் இதயம் கோவையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு வயது குழந்தைக்கும், கல்லீரல் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 4 வயது குழந்தைக்கும், சிறுநீரகம் வடபழனி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கும் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மூன்று உயிர்களுக்கு...
மூன்று உயிர்களை வாழவைத்த பிஞ்சுக்குழந்தைக்கு இறுதி மரியாதை அளிக்க ஒட்டுமொத்த ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாக ஊழியர்களும் கையில் மலர் மாலைகளுடனும் உதிரிப்பூக்களுடனும் அணிவகுத்து நின்றனர்.
பெண் குழந்தையை இழந்த தாயின் கண்ணீர் அங்கு காத்திருந்தவர்களை கரைய வைத்தது. மருத்துவர்கள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை கண்ணீருடன் பிஞ்சுக்குழந்தைக்கு மரியாதை செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.

அரசு மரியாதையுடன்...
பிஞ்சுக்குழந்தை உடலுக்கு அரசின் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டதை தொடர்ந்து, தகன மேடையை நோக்கி குழந்தையின் உடல் புறப்பட்டது.

மறைந்த இந்த குழந்தை தான் தமிழ்நாட்டிலேயே மிக குறைந்த வயதில் உடலுறுப்பு தானம் செய்த குழந்தை என்ற செய்தியும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved