Also Watch
Read this
பாஜகவில் பதவியை பெறுவதற்காக தனக்கு தெரிந்த எல்லா வழிகளையும் பயன்படுத்திவிட்டு விழிபிதுங்கி நிற்கும் சரத்குமார், இறுதி முயற்சியாக தனது ஆதரவாளர்களை மீண்டும் அழைத்து, "நாட்டாமை குடும்பம்" என, பச்சைக் குத்த வைத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

எம்பி, எம்எல்ஏ என...
திமுகவில் பயணித்து எம்பியாகவும், அதிமுக உடன் கூட்டணியில் எம்.எல்.ஏவாகவும் பவுசாக வலம் வந்த சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் தனி இயக்கம் கொண்டு, கூட்டம் காட்டி கூட்டணி அமைத்து வந்தார்.

இந்நிலையில், அர்த்த ராத்திரியில் வந்த ஒற்றை சிந்தனையால், பார்த்து பார்த்து வளர்த்த கட்சியையே பாஜகவில் கரைத்து விட்டு தன்னையும் அதில் இணைத்துக் கொண்டார். பாஜகவில் அப்போதிருந்த மாநிலத்தலைவர் அண்ணாமலையின் உத்தரவாதத்தின்படி, தனக்கு வெயிட்டான பொறுப்பு கட்சியில் கிடைக்கும் என, சரத்குமார் ஆசையில் எதிர்பார்த்திருந்தார்.

நாட்டாமை குடும்பம்...
ஒன்றல்ல இரண்டல்ல கட்சியில் சேர்ந்து 850 நாட்களை கடந்தும் சரத்துக்கு ஒரு பதவி கூட கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான். மாநிலத்தலைமை மாறிய பின்பும் கூட தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சரத், தூசு படிந்து கிடந்த தனது நாட்டாமை குடும்பத்தை தட்டி எழுப்பி அண்மையில் ஒரு நிகழ்ச்சியை கூட நடத்தி பார்த்தார்.

நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு...
எதற்கும் அசராத பாஜக தலைமையோ சரத்குமாரை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. இதனால் விரக்தியின் உச்சத்துக்கே சென்றவர், தனது ஆதரவாளர்களை திரட்டி மாநிலத்தலைவர் நயினாரின் வீட்டிற்கே சென்று முறையிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி காய் நகர்த்திய அவரை, அப்போது சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் நயினார் நாகேந்திரன்.

ரசிகர்களுக்கான கிரீன்கார்டு
தேர்தலும் முடிந்தது, பரபரப்பும் ஓய்ந்தது, இனியாவது தன்னை பாஜக கவனிக்குமா? என்ற ஏக்கத்தில் இருந்த சரத்குமார், மீண்டும் தனது ஆதரவாளர்களை அழைத்து நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். இந்த முறை , தனது ஆதரவாளர்கள் அனைவரையும் நாட்டாமை குடும்பம் என பச்சை குத்த வைத்தார்.

ஒவ்வொருவரும் பச்சைக் குத்திக் கொள்வதை பார்த்து மனம் குளிர்ந்த சரத்குமார், இது ரசிகர்களுக்கான கிரீன் கார்டு என்றார். ஷூட்டிங் இருப்பதால் பச்சைக் குத்திக் கொள்ள முடியவில்லை என்றார்.

எம்.ஜி.ஆர். பாணியில்...
எம்.ஜி.ஆர் எப்படி அதிமுக தொண்டர்களை பச்சை குத்திக்க வைத்தாரோ, அதே பாணியில் சரத்குமாரும் பச்சைக் குத்த வைத்திருப்பதாக ஆதரவாளர்கள் சிலாகித்து பேசி வருகின்றனர். இப்படி முட்டி மோதி தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்க போராடிவரும் சரத்குமார், இன்னும் எத்தனை காலத்திற்கு தான் குண்டுசட்டியில் குதிரை ஓட்டப்போகிறார் என முன்னாள் நாட்டாமை குடும்பத்தினர் உச் கொட்டுகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved