Also Watch
Read this
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள்...
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர்.

கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்புர விழா மிக முக்கியமான நிகழச்சியாகும். முதல் திருநாளில், இரவு 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பவனி நடைபெற்றது, 5ஆம் திருநாளான கடந்த 10ஆம் தேதி ஐந்து கருட சேவையும் 7ஆம் திருநாளான கடந்த 12ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக...
9ஆம் திருநாளன இன்று, ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்புர தேரோட்டம் நடைபெற்றது. திரு ஆடிப்பூர தேர்த் திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆடிப்பூரம் எனபடுவது ஸ்ரீ ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும்.

இந்நாளில் நடைபெறும் இந்த தேரோட்டத்தில் பங்கேற்று ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னாரை தரிசனம் செய்தால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் தேரை வடம் பிடித்து இழுத்தால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

சிறப்பு அபிஷேகம்
அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதுரை கள்ளழகர் சூடிக்களைத்த வஸ்திரத்தை உடுத்தி திருத்தேரில் எழுந்தருளச் செய்தனர்.

இத்தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் "கோவிந்தா கோபாலா கோவிந்தா" கோஷத்துடன் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியாக தேரை இழுத்துச்சென்றனர்.

அமைச்சர்கள் பங்கேற்பு
தேரோட்டத்தில் அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, கீர்த்தனா, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், விருதுநகர் எம்எல்ஏ செல்வம், ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட கண்காணிப்பாளர் கௌதம் கோயல், கோவில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை என்பதால் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved