Also Watch
Read this
ஒரு தொகுதியில் வென்றவர்கள், குறுகிய காலத்தில் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிடுவது வாக்காளர்களை அவமதிக்கும் செயல் என்று, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆறு எம்எல்ஏக்கள் ராஜினாமா
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 அதிமுக எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை, திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்தது.

மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல்
தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன், பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இடைக்கால தடை கோரி மனு
வழக்கு முடியும் வரை மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது;
பொது மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் அதை கேலிக்கூத்தாக்குகிறது. இது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல். குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இடைக்கால தடை விதிக்க முடியாது
இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும், இதை தடுக்க இதுவரை எந்த வழிமுறைகளும் இல்லை. சில அசாதாரண சூழ்நிலைகளில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும். இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. ஏற்கெனவே இதுபோல வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved