Also Watch
Read this
டெல்லி கல்காஜி பகுதியில் உள்ள பிரபல ஆஸ்தா குஞ்ச் பூங்காவில், பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற 17 வயது சிறுமியை, தங்களை காவலர்கள் என பொய் சொல்லி ஏமாற்றிய 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், அடுத்த 12 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு 3 குற்றவாளிகளையும் கைது செய்தனர்.

ஆண் நண்பருடன்...
டெல்லி கல்காஜி பகுதியில் அமைந்துள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் திங்கள்கிழமை மாலை இந்த பயங்கர சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி, தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது ஆண் நண்பருடன் கல்காஜி கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு இரவு 7.30 மணியளவில் பூங்காவிற்குள் நுழைந்தார்.

அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், தங்களைக் காவலர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு அதிகார தோரணையில் சட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி இருவரையும் மிரட்டி உள்ளனர்.

கத்தியைக் காட்டி...
தொடர்ந்து, இருவரையும் தனித்தனியாகப் பிரித்த அக்கூட்டம், துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி சிறுமியை பயமுறுத்தி பூங்காவின் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. ஆண் நண்பரை தூரத்தில் நிறுத்திவைத்து மிரட்டியபடியே, அந்த 3 பேரும் அடுத்தடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல, பாதிக்கப்பட்ட சிறுமியின் நண்பர் இரவு 8.45 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்து உள்ளார்.

அதிரடி நடவடிக்கை...
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அமர் காலனி காவல் துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர், தீவிர விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களைச் சேகரித்தனர். சிறுமி உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் சிசிடிவி காட்சிகளையும், தொழில்நுட்பக் குறிப்புகளையும் ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தி...
அடுத்த நாளே நடைபெற்ற தேடுதல் வேட்டையில், முதன்மை குற்றவாளியான ஆசிஃப் என்பவனை அமர் காலனி பகுதியில் வைத்து காவல்துறையினர் வளைத்துப் பிடித்தனர். அப்போது ஆசிஃப் காவல்துறையினரை நோக்கி 3 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஹெட் கான்ஸ்டபிள் ராஜேஷ் என்பவரின் புல்லட்புரூப் ஜாக்கெட்டில் ஒரு குண்டு பாய்ந்தது.

தற்காப்பிற்காக காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் ஆசிஃப்பின் வலது காலில் குண்டுபட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய ஹேமந்த் மற்றும் அவரது தம்பி முகேஷ் ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.

பெண்கள் ஆணையம்...
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகளில் ஒருவன் ஏற்கெனவே பெண்களைக் கேலி செய்த புகாரில் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்து நீக்கப்பட்டவன் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, காவல்துறை விசாரணை அறிக்கையைக் கோரியுள்ளது. மேலும், ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் முறையான மின்விளக்கு வசதி இல்லாததும், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதுமே இத்தகைய குற்றங்களுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

12 மணி நேரத்தில்...
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க கண்காணித்து வருவதாக டெல்லி பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் பாதுகாப்பு ரோந்துப் பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைப் பிடித்த டெல்லி காவல்துறையினருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved