Also Watch
Read this
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அறியாமையின் வெளிப்பாடாக திமுக வெர்சஸ் த.வெ.க. என விஜய் பேசி வருவதாக விமர்சித்தார். கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக கூறிய ஆ.ராசாவை விட்டு விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் மோதிக் கொண்டிருக்கிறார் எனவும் எடப்பாடி பழனிசாமி கிண்டலடித்தார்.

எடப்பாடியில் இபிஎஸ்
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 8ஆவது முறையாக போட்டியிடுகிறார். தேர்தல் நடத்தும் அலுவலரான நடராஜனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;

அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேமுதிகவுக்கு அரை சதவீதம் தான் வாக்கு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு 2026 மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவதாக கூறினேன். அதற்குள் அவர்கள் மனநிலை, அணி மாறி விட்டார்கள். உதயநிதி ஸ்டாலின் சிபிஎஸ்சி பள்ளி நடத்தி வருகிறார். அதில் மும்மொழிப் பாடமும் நடத்தப்படுகிறது. தங்களுக்கு தேவை என்றால் மட்டும் எந்த மொழியை வேண்டுமானாலும் அனுமதிப்பார்கள்.

பிரதமர் மோடி வருகிறார்
தமிழகத்தில் நடைபெறுவது சட்டப்பேரவை தேர்தல். மக்களவை தேர்தல் அல்ல என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டு பேச வேண்டும். ஒன்று, இரண்டு திட்டங்கள் விடுபட்டிருந்தால் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விடுபட்டது அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். 15ஆம் தேதி கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நானும் பங்கு பெறுகிறேன்.

பெரும்பான்மை வெற்றி
ஆ.ராசா பேசியதாக வெளியான ஆடியோ இந்திய அளவில் வைரலானது. கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகவும், பட்டியல் இனமக்கள் பாகுபாடு பார்க்கப்பட்டதாகவும், ஆடியோவில் பேசப்பட்டிருந்தது.

இதுகுறித்து தான் கருத்துக் கூறினேன். இந்த விவகாரத்தில் ராசா மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, என் மீது பாய்வதில் என்ன இருக்கிறது? அதிமுக தலைமையிலான கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெறும். அதிமுக அதிக இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved