Also Watch
Read this
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஏராளமான இந்தியர்கள் மாயமாகி இருப்பதாக வெளியான தகவல் உறவினர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வதந்திகளை நம்பாமல் நேரடியாக களமிறங்கிய குடும்பங்கள், தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

நேபாளத்தில் இருந்து...
நேபாளத்தை அதிரவைத்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமாகி இருப்பதாக வெளிவந்துள்ள தகவல், தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதுமே பெரும் சோகத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

யாரோ சொன்ன அரைகுறை தகவல்களையும், சமூக வலைதள வதந்திகளைம் நம்பி பதறுவதை விட, களத்திற்கே நேரடியாக சென்று உண்மையை அறிவோம் என துணிந்து, காணாமல் போன தங்களது பிரியமானவர்களை தேடி, உறவினர்கள் தலைநகர் காத்மாண்டுவை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

’பதறாதீங்க, நாங்கள் இருக்கோம்’
காத்மாண்டுவில் இறங்கும் மக்கள், நேராக தஞ்சமடைவது அங்கே அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தில் தான். உறவுகளை இழந்து, என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அவர்களை, தூதரக அதிகாரிகள்

முகமலர்ச்சியோடும், இன்முகத்தோடும் வரவேற்று, ஆறுதல் வார்த்தைகளை கூறி அரவணைக்கிறார்கள். ’பதறாதீங்க, நாங்கள் இருக்கோம்,’ என்ற அந்த நம்பிக்கையான சொற்கள், துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு மிகப்பெரிய பலமாக மாறிவருகிறது.

தரவுகள் சேகரிப்பு
தினமும் சராசரியாக 30 முதல் 40 பேர் வரை தூதரகத்தின் கதவுகளை தட்டுகிறார்கள். அவர்களிடம் எந்தவொரு சலிப்பும் காட்டாமல், அதிகாரிகள் மிகவும் நிதானமாக உரையாடுவதாகவும், அவர்களிடம் கடைசியாக எப்போது பேசினீர்கள்?

அவர்கள் கடைசியாக இருந்த இடம் அல்லது ஹோட்டல் முகவரி தெரியுமா? அவர்களோடு இருந்து தப்பி வந்தவர்களிடம் பேசினீர்களா? என நுணுக்கமான கேள்விகளை கேட்டு தரவுகளை சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

’கடைசி நபர் மீட்கப்படும் வரை’
தொடர்ந்து, காணாமல் போனவர்களின் பெயர், பாலினம், புகைப்படங்கள் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களை பெறுகிறார்கள். இந்த தகவல்களை உடனடியாக நேபாள அரசிடம் வழங்கி, களத்தில் உள்ள மீட்புக் குழுக்கள் மூலம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த செய்கிறார்கள். ’கடைசி நபர் மீட்கப்படும் வரை தூதரக கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கும், எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்,’ என உருக்கமான உறுதியளித்து அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்கள்.

கண்ணீரோடு வரும் இந்தியர்களுக்கு காத்மாண்டு தூதரகம் தற்போது ஒரு நம்பிக்கை கூடாரமாகவே மாறியிருக்கிறது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக மதியழகன்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved