Also Watch
Read this
த.வெ.க.வை சரியாக கணிக்கத் தவறியதும் திமுக செய்த மிகப்பெரிய தவறு தான் என்று, திருமாவளவன் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு முன் வைத்த நிலையில், கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் தொடர்பாக விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தாம் சொல்லியும் திமுக செய்யவில்லை என்றும் கூறி உள்ளார்.

ஏன் வழக்கு தொடரவில்லை?
தர்மபுரியில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது;
கரூர் சம்பவத்திலே விஜய் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று நான் சொன்னேனா, இல்லையா? ஏன் வழக்கு தொடரவில்லை?

எதற்காக ’லிபரலாக’ நடந்து கொண்டீர்கள்? அவர் மீது வழக்கு போட என்ன தயக்கம்? காலம் தாழ்த்தி வந்தார், வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார். அதனால் தான் கும்பல் கூடியது, நெரிசல் ஏற்பட்டது.

நெரிசல் தான் சாவுக்குக் காரணம் என்கிறபோது, அதற்குப் பொறுப்பேற்கக்கூடிய அத்தனை பேரையும் வழக்கிலே சேர்த்திருக்க வேண்டுமா, வேண்டாமா? இந்த அணுகுமுறைதானே காரணம்? அப்போதே விஜய்-ன் அரசியலை அம்பலப்படுத்தி இருக்க வேண்டுமா, வேண்டாமா? உங்களைக் குறிவைத்து, திமுகவைக் குறிவைத்து மிகக் கடுமையாக விஜய் பேசும்போது, எதிர் அரசியலைப் பேசி இருக்க வேண்டும். நீங்கள் யாருமே பேசவில்லை. நான் பேசினேன்,

தவெகவை விமர்சித்தேன்
‘ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை’ என்று நான் பேசினேன். அன்றைக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இன்றைக்கு எப்படி நம்பிக்கை வந்தது?

அவர் அதிமுக ஆதரவைக் கேட்கவில்லை. பாமக ஆதரவைக் கேட்கவில்லை. பாஜக ஆதரவைக் கேட்கவில்லை. காங்கிரஸ் ஆதரவைக் கேட்டார். திருமாவளவனின் ஆதரவைக் கேட்டார். நாங்கள் விமர்சித்தோம். ‘ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை’ என்று சொல்லிவிட்டு, எப்படி திருமாவளவன் விஜயோடு கைகோர்த்தீர்கள்? என்று கேட்கிற நீங்கள், அதே விஜயைத் திருப்பி கேட்கலாமே? ‘உங்களை ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என சொன்னாரே திருமாவளவன், எப்படி ஆதரவைக் கேட்டீர்கள்?’ என்று நீங்கள் கேட்கலாமே?

இடதுசாரிகள் நிலைப்பாடு
இடதுசாரிகள் மதச்சார்பின்மையில் உறுதியாக இருப்பார்கள். அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் அந்த முடிவை நாம் எடுப்போம் என்று துணிச்சலாக கூறினேன். இடதுசாரிகள், பிரசிடெண்ட் ஆட்சி வந்து விடாமல் தடுப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள், நாங்களும் எடுத்தோம். காங்கிரஸ் ஆதரவு தந்தது, இடதுசாரிகள் ஆதரவு தந்தார்கள், நாங்களும் ஆதரித்தோம். காரணம், குடியரசுத் தலைவர் ஆட்சி இங்கு வந்து விடக் கூடாது, மதச்சார்பற்ற சக்திகளாக இருக்கிற காங்கிரஸ், இடதுசாரிகளை உள்வாங்கி கொண்டபோது, அங்கேதான் விடுதலைச் சிறுத்தைகள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம்.

கூட்டணி முறிவுக்கு தி.மு.க. தான் காரணம்
திமுக கூட்டணியில் விசிக நீடிக்காமல் போனதற்கு 100 சதவீதம் திமுக தான் காரணம். திமுகவின் தவறான அணுகுமுறையால் ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறின.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved