Also Watch
Read this
திமுக எம்.எல்.ஏ.க்களை கைது செய்வதும், அதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதையும் முழு நேர பணியாக செய்து வரும் த.வெ.க. அரசு, பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள தவெக நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். திமுக எம்எல்ஏக்களை கைது செய்வதை இந்த அரசின் ஒரே பணியாக உள்ளது, தவெக நிர்வாகிகள் மீது புகார் வந்தால் இந்த அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்றும் சாடினார்.

பாளையங்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை, உதயநிதி நேரில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
விளாத்திகுளம் எம்எல்ஏவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு வந்து உள்ளேன்.

அவர் நலமுடன் தைரியமாக இருக்கிறார். எதிர்க்கட்சிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வதை மட்டுமே இந்த அரசு பணியாக மேற்கொண்டு வருகிறது. இந்த அரசு வேறு எதையும் செய்யவில்லை.

24 மணி நேரமும்...
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மீது அவர்கள் கட்சியினரே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்கள். இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். ஆனால், இதுவரை அந்த நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக நிர்வாகிகளை, சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சோபா கொடுத்து விலைக்கு வாங்குவதையும் இந்த அரசு 24 மணி நேரமும் முழு நேர பணியாக மேற்கொண்டு வருகிறது. சோபா கொடுத்து யாரை வாங்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved