Also Watch
Read this
மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டுவர தமிழக அரசு விடுத்த கோரிக்கையை இரண்டாவது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோவை மற்றும் மதுரை மக்கள் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது எப்படி? என்று அடுக்கடுக்கான கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளனர்.

மதுரை, கோவையில்...
தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து, மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதன்படி, மதுரையில் 11 ஆயிரத்து 340 கோடி ரூபாயிலும், கோவையில் 10 ஆயிரத்து 740 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்தது.

2ஆவது முறையாக நிராகரித்த மத்திய அரசு...
இதனை நிராகரித்து, திருப்பி அனுப்பிய மத்திய அரசு, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க குறைந்தது 20 லட்சம் மக்கள் தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள் தொகை தான் உள்ளதால் நிராகரித்ததாக விளக்கம் அளித்தது.

இதனை தொடர்ந்து மெட்ரோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது.

மதுரை மக்கள் கேள்வி
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்று மீண்டும் விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை என்றும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த தொடர் மெட்ரோ ரயில் நிராகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மதுரை மக்கள், எதற்காக மெட்ரோ ரயிலை கேட்கிறோம் என்ற பட்டியலை முன்வைத்துள்ளனர். மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் எப்படி? அனுமதி வழங்கி வருகிறீர்கள் என அடுக்கடுக்கான கேள்வியை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளனர்.

தவெக அரசின்...
கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நீடித்து வருவதால் அதற்கு தீர்வாக மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தவெக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையால் கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் வருமா? என்பது தான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved