Also Watch
Read this
தேனி அருகே, "புறா பிடித்து தருகிறேன்," என்று ஆசைகாட்டி அழைத்து சென்று 6ஆம் வகுப்பு மற்றும் 5ஆம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்களை, 150 அடி ஆழக் கிணற்றில் தள்ளி படுகொ* செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

காணாமல் போன சிறுவர்கள்
தேனி மாவட்டம், ரங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன்களான ஸ்ரீஹரிஷ் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பும், சபரீஷ் 5ஆம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 24ஆம் தேதி, வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவர்கள் இருவரும், மாலை 5 மணியளவில் விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளனர். ஆனால், இரவாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் பதறிப்போன தந்தை சின்னத்தம்பியும் உறவினர்களும் ஊர் முழுவதும் தேடியும் சிறுவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, போடிநாயக்கனூர் ஊரக காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகாரளித்தனர். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுவர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டனர்.

அதிர்ச்சி தந்த விசாரணை
அப்போதுதான் அந்த வழக்கில் முதல் திருப்பம் ஏற்பட்டது. சிறுவர்களின் பெரியப்பா, 24ஆம் தேதி மாலை தனது வீட்டுக்கு அருகே இருக்கும் 19 வயதான கேசவ் பாலாஜி என்ற இளைஞனுடன் 2 சிறுவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த கூழ் கடையில் அந்த இளைஞன் சிறுவர்களுக்கு கூழ் வாங்கி கொடுத்துவிட்டு அழைத்து சென்றான் என்ற தகவலை போலீஸாரிடம் உடைத்தார். உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர், 19 வயதான கேசவ் பாலாஜியை தூக்கிவந்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.
போலீஸாரின் விசாரணையில், கேசவ் பாலாஜி தொடக்கத்தில் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்து மழுப்ப முயன்றான். ஆனால், தங்களின் பாணியில் காவல்துறையினர் கெடுபிடி காட்டியதும், அந்த இளைஞன் கூறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.

உடல்கள் மீட்பு
’கரட்டுப்பட்டியில் உள்ள தனியார் தென்னந்தோப்புக் கிணற்றில் 2 சிறுவர்களையும் தள்ளி விட்டுட்டேன்,’ என்று அவன் கூறியதை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினருடன் விரைந்த போலீஸார், அங்கு இருந்த 150 அடி ஆழக் கிணற்றிலிருந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஸ்ரீஹரிஷ், சபரீஷ் ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் நேரில் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தினார். அதில், தனது 40 ஆயிரம் ரூபாய் போனை அந்தச் சிறுவர்கள் திருடி விட்டதாகவும், அதனால் தான் அவர்களை கிணற்றில் தள்ளிவிட்டேன் என்று கூறிய கேசவ் பாலாஜி, அடுத்து, சிறுவர்களின் தந்தை தன் தாயாரிடம் சண்டை போட்டார் என மாற்றி மாற்றி பேசியிருக்கிறான்.

வெளிவந்த கொடூர பின்னணி
ஆனால், காவல்துறையினர் தங்களது தீவிர விசாரணையில் கொடூரப் பின்னணியை கண்டறிந்தனர். உயிரிழந்த சிறுவர்களின் தந்தை சின்னத்தம்பிக்கும், கொலையாளி கேசவ் பாலாஜியின் தாயாருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்திலும் அவமானத்திலும் துடித்த கேசவ் பாலாஜி, சின்னத்தம்பியின் குடும்பம் ஆயுசுக்கும் கண்ணீர் வடித்து வருந்த வேண்டும் என்ற வஞ்சக எண்ணத்தோடு இந்த சதியை தீட்டியதாக சொல்லப்படுகிறது.

சிறுவர்கள் இருவரும் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள கிணற்று புறாக்களை பிடிக்கச் செல்வதும், அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்யும் தாத்தாவை பார்க்க வருவதும் கேசவ் பாலாஜிக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கேசவ் பாலாஜி, 24ஆம் தேதி மாலை, ’வாங்கடா, கிணற்றில் நிறைய புறா இருக்கு, பிடிச்சு தர்றேன்,’ என ஆசை வார்த்தை கூறி, இரண்டு சிறுவர்களையும் தென்னந்தோப்பு கிணற்றுக்கு அழைத்து சென்று, கிணத்துக்குள்ள எட்டி பாருங்கடா, புறா இருக்கான்னு, என்று கூறி, இருவரையும் ஒரே தள்ளாக 150 அடி ஆழ கிணற்றுக்குள் தள்ளிவிட்டு கொடூரமாகக் கொ* செய்திருக்கிறான். சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

சம்பவத்திற்கு காரணம் தகாத உறவு
கைது செய்யப்பட்ட கேசவ் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சொந்த பகைக்காக, எதுவுமே அறியாத இரு பிஞ்சு சிறுவர்களை புறா பிடித்து தருவதாக அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளி கொன்ற இந்த நெஞ்சை பிளக்கும் சம்பவம், அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.