Also Watch
Read this
தூத்துக்குடியையே உலுக்கிய டாஸ்மாக் ஊழியரின் மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மரணத்தைச் சுற்றியுள்ள மர்ம முடிச்சுகளும், காவல்துறை மீது சுமத்தப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

சட்டவிரோத மது விற்பனை
தூத்துக்குடியை அதிர வைத்திருக்கும் டாஸ்மாக் ஊழியர் அருணாச்சலத்தின் மரணம் அரசியலிலும், காவல்துறை வட்டாரத்திலும் மிகப்பெரிய புயலை கிளப்பியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், அமுதா நகரை சேர்ந்த 24 வயது இளைஞர் அருணாச்சலம். டாஸ்மாக் பார் ஒன்றில் பணியாற்றி வந்த இவரை, கடை திறப்பதற்கு முன்பே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த 17ஆம் தேதி தென்பாகம் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அன்று மாலையே தலையிலும் காலிலும் கடுமையான ரத்த காயங்களோடு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் மரணம்
பின்னந்தலையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக, கடந்த 21ஆம் தேதி பெற்ற தாயிடம் கூட எந்தவொரு முன் அனுமதியும் பெறாமல் அவசர அவசரமாக தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி கடந்த 23ஆம் தேதி அதிகாலை அருணாச்சலத்தின் உயிர் பரிதாபமாக பிரிந்தது. இளைஞர் உயிரிழந்த செய்தி பரவியதும், அருணாச்சலத்தின் பெற்றோர், உறவினர்கள், தனது மகனை காவல்துறையினர் அடித்து சித்ரவதை செய்தே கொன்றுவிட்டார்கள் என தென்பாகம் காவல் நிலையத்தில் புகாரளித்து, உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் குதித்தனர். நிலைமையை கட்டுப்படுத்த திணறிய காவல்துறை, அவர் மயங்கித்தான் விழுந்தார் எனக் கூறி 8 நொடிகள் மட்டுமே கொண்ட அரைகுறை சிசிடிவி வீடியோவை வெளியிட்டது.

நீதித்துறை நடுவர் விசாரணை
இதனிடையே, அருணாச்சலத்தின் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும், சிறப்பு மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில், சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் அவரது உடற்கூறாய்வு தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த முழு பிரேத பரிசோதனையும் கேமராவில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும், அருணாச்சலத்தின் பெற்றோரிடம் நீதித்துறை நடுவர் தீவிர விசாரணை நடத்தினார்.

உண்மை கண்டறியும் குழு
அப்போது, ’என்னை உதவி ஆய்வாளர் தாரண்யாவும் 3 காவலர்களும் கடுமையாக தாக்கினார்கள்’ என்று தன் மகன் அருணாச்சலம் உயிருக்கு போராடியபோது வாக்குமூலம் கொடுத்ததாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கண்ணீருடன் மனு அளித்தனர். இதற்கிடையே, பிரேத பரிசோதனை கூடத்திற்கு வந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன், வழக்கறிஞர் மாடசாமி உள்ளிட்ட காவல்துறை சித்திரவதை மரணங்களுக்கு எதிரான கூட்டு இயக்க உண்மை கண்டறியும் குழுவினர் நிலவரத்தை கேட்டறிந்தனர்.

உடல் நல்லடக்கம்...
அப்போது பேசிய வழக்கறிஞர் மாடசாமி, உடலை ஒப்படைக்கும் போது காவல்துறையினர் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும், குடும்பத்தினரை மூளைச்சலவை செய்து அவசர அவசரமாக உடலை கொடுத்துள்ளார்கள் என்றார். அருணாச்சலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் வழங்கிட வேண்டும் என்ற அவர், அந்த அறிக்கையில் மனித உரிமை மீறல் உறுதி செய்யப்பட்டால், அத்துமீறிய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடுவோம் என கெடு விதித்தார். பிரேத பரிசோதனைக்கு பின் அருணாச்சலத்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அநீதிகள் தொடர்கதை...
இந்த விவகாரம், காட்டுத்தீயாக பரவிய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், காவல்துறையையும், ஆளுங்கட்சியையும் காய்ச்சி எடுத்தார். பெற்ற தாயின் கண்முன்னேயே அருணாச்சலத்தை காவல்துறை கொடூரமாக அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்கள் என்றும், சமீபத்தில் நாகர்கோவிலில் சபரிவர்மன் உயிரிழந்தது என அநீதிகள் தொடர்கதையாகி வருவதாக கூறினார்.

தியேட்டரில் விசில் அடித்து...
அப்போது, நயினார் நாகேந்திரனின் அருகே நின்றபடி கண்ணீர் மல்க அருணாச்சலத்தின் தாய் அளித்த பேட்டி, அங்கிருந்த அனைவரின் நெஞ்சையும் பிசைந்தது. இவ்வளவு கொடூரம் நடந்த பிறகும் தியேட்டரில் உட்கார்ந்து ஜாலியாக படம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே, அவர்களுக்கு மனசாட்சியே இல்லையா? உங்கள் குடும்பத்தில் யாராவது இறந்திருந்தால் இப்படி தியேட்டரில் விசில் அடித்துக்கொண்டு படம் பார்த்து கொண்டிருப்பீர்களா? என அவர் கண்ணீர் வடித்து ஆவேசப்பட்டார்.

நீதி கிடைக்குமா?
விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்படும் சாமானியர்கள் பிணமாகத் திரும்புவது, சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்குகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் அருணாச்சலத்தின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved