Also Watch
Read this
மக்களவையில் கடும் அமளிக்கு இடையே, பொது தேர்வுகள் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில்...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 6ஆம் நாளான இன்று ஜூலை 27ஆம் தேதி, வழக்கம்போல் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அவை நடவடிக்கை தொடங்கியவுடன் நீட் விவகாரம் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கைக்கு திரும்பி, விவாதங்களில் பங்கேற்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.

மக்களவை ஒத்திவைப்பு
ஆனாலும், மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை 12 மணிக்கு கூடியதும், எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. கடும் அமளிக்கு மத்தியில் பொதுத் தேர்வு - முறைகேடுகளை தடுத்தல், திருத்த மசோதா 2026ஐ, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அமளி நிலவியதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடாமல் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தி உள்ளார்.

வினாத்தாள் கசிவு மசோதாவின் அம்சங்கள்...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது. தற்போது வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகள், பொதுத்தேர்வுகள் முறைகேடுகளை தடுத்தல் சட்டம் 2024ன் கீழ் விசாரிக்கப்படுகின்றன. இதில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதா வரையறுக்கப்பட்டு உள்ளது.

10 ஆண்டுகள் சிறை, ரூ.10 கோடி அபராதம்
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மசோதாவின்படி வினாத்தாள் கசிவு குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்
குழுவாக, கும்பலாக முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 10 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் அடுத்த 8 ஆண்டுகள் எந்த ஒரு பொதுத்தேர்வையும் எழுத முடியாது.
வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிரடிப் படை எஸ்டிஎப் நியமிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்
இவ்வாறு புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ளது.