பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த ராஷ்டிரிய ஜனதா தளம், இந்த தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்திருக்க, தேசிய கட்சியான காங்கிரஸ் இரட்டை இலக்கத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தவற விட்டிருக்கிறது. இந்தியா கூட்டணியின் ஆர்.ஜே.டி.- காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம்? காங்கிரஸ் கற்க வேண்டிய பாடம் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.பீகார் சட்டமன்ற தேர்தலில், இதுவரை இல்லாத வகையில், ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும்,மோசமான வரலாற்று தோல்வியை சந்தித்து மண்ணை வாரியிருக்கிறது.பீகார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றாக சேர்ந்து 50 இடங்களை கூட தாண்ட முடியாமல் போயிருக்கிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 143 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம், 25 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் 6 இடங்களை மட்டுமே பெற முடிந்து இருக்கிறது. ’மகாகத்பந்தன்’ கூட்டணியின் தோல்வி காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறியிருக்கிறது. எவ்வளவோ முயற்சி செய்தும் சமீபத்தில் நிகழ்ந்த எந்த தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், அசாதுதின் ஓவைசியின் AIMIM கட்சிக்கும், தேசிய கட்சியான காங்கிரஸுக்கும் தான் போட்டி என்று சொல்லும் அளவுக்கு பீகார் தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறது. கடந்த தேர்தலில் 75 இடங்களில் வென்றிருந்த ராஷ்டிரிய ஜனதா தளம்வெறும் 25 இடங்களிலும், 19 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் 6 இடங்களிலும் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன.இந்த நிலையில், ஆர்.ஜே.டி.- காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.நிதிஷ் குமாரின் பலமாக பார்க்கப்பட்ட பெண்கள் வாக்கு வங்கியை உடைக்க தேஜஸ்வி யாதவ் தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு வந்தால், ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும், தொழில் தொடங்க 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் பலனளிக்காமல் போனது. அதோடு, தேஜஸ்வி யாதவ் கொடுத்த வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் இருந்ததும் தோல்வி முகத்திற்கு ஒரு காரணமாக சொல்கிறார்கள்.ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என தேஜஸ்வி யாதவ் கொடுத்த வாக்குறுதியை மக்கள் நம்பவில்லை என்பதும் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த காலங்களில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலும் யாதவ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். இந்த முறை சொற்ப அளவில் தலித் மற்றும் பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், RJD போட்டியிட்ட 143 தொகுதிகளில் சுமார் 52 இடங்கள் யாதவ் சமூகத்தினருக்கு தான் கொடுக்கப்பட்டது.ஆகையால், மற்ற சமூக வாக்குகளை கவரும் தேஜஸ்வி யாதவின் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போயிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை ரவுடி கட்சியாக, குண்டர்கள் கூடாரமாக பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் சித்தரித்து விமர்சித்து வந்த NARRATIVE-ஐ தேஜஸ்வி யாதவ் உடைக்க தவறியதும் தோல்விக்கு ஒரு காரணமாக குறிப்பிடப்படுகிறது. ஏனென்றால், 1990ஆம் ஆண்டு ஆர்.ஜே.டி. ஆட்சியின் போது, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு நிர்வாக திறனும் இல்லாமல் இருந்ததை குறிப்பிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முன் வைத்த விமர்சனம் கை கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.அதோடு, ராகுல் - தேஜஸ்வி யாதவின் பிரச்சாரங்கள் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததும் தோல்விக்கான அம்சங்களாக பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே இந்தியா கூட்டணி இடையே இணக்கமான போக்கு இல்லாமல் இருந்தது. தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி. இடையே உடன்பாடு இல்லாமல் மோதல் போக்கு நிலவியது. காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு பிடிவாதம் செய்து வந்தது கூட்டணியின் உத்வேகத்தை குறைத்தது என்ற பார்வையும் முன் வைக்கப்படுகிறது. யாதவ் அல்லாத சமூகத்தினரின் வாக்குகள் ஆர்.ஜே.டி. கூட்டணிக்கு விழாமல் போனதும் இந்தியா கூட்டணியின் படு தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.இஸ்லாமிய சமூக வாக்குகளை கவர ஆர்.ஜே.டி. அமைத்த வியூகமும் கை கொடுக்கவில்லை என சொல்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் வக்பு வாரிய திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என ஆர்.ஜே.டி. கொடுத்த வாக்குறுதி காரணமாக, சொந்த சமூகமான யாதவ் சமூக ஆதரவு கூட குறைந்து விட்டதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.இது ஒரு பக்கம் இருக்க, ராகுல் காந்தி கையிலெடுத்த வாக்கு திருட்டு பிரச்சாரமும் பீகார் தேர்தல் களத்தில் எதிரொலிக்கவில்லை என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன. காங்கிரஸ், ஆர்.ஜே.டி.க்கு பலமாக இருக்கும் பட்டியலின சமூக வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகளும் மொத்தமாகதேசிய ஜனநாயக கூட்டணியை நோக்கி நகர்ந்தது, இந்தியா கூட்டணிக்கு பலத்த அடி விழ காரணமாக மாறியிருக்கிறது.தொடர் தோல்விகளை மட்டும் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, இனிமேலாவது பாடம் கற்குமா? என்பது தான் பீகார் மாநில தேர்தலில் இருந்து எழுந்திருக்கும் பெரும் எதிர்பார்ப்பு.இதையும் பாருங்கள் - Bihar Election Results | Biharல் மண்ணை கவ்விய RJD ஆழ் கடலில் தத்தளிக்கும் Congress | INDIA