தமிழ்நாடு

மத்திய போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவோர் விகிதம் குறைவு” நான் முதல்வன் திட்ட வெற்றி விழாவில் முதல்வர் பேச்சு | competitive exams

தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் விகிதம் குறைந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நான் முதல்வன் திட்ட முதலாம் ஆண்டு வெற்றி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இருந்து மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவோர் விகிதத்தை அதிகரிக்க மாணவர்கள் உழைக்க வேண்டும் என்றார்

2016 ஆம் ஆண்டு முதல் குடிமை பணி தேர்வில் 10 விழுக்காடாக இருந்தது 5 விழுக்காடாக குறைந்துள்ளது. இந்திய அளவில் குடிமை பணி தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. இதை மாற்ற நாம் தான் மாற வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது. இதற்காக ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு முதன்மை தேர்வுக்கு தயாராக மாதம் 7500 வீதம் பத்து மாதங்களுக்கு வழங்கப்படும். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்களுக்கு 25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதுபவர்களுக்கும், தயாராபவர்களுக்கும் இது உதவியாக இருக்கும். அதைவிட அவர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆனால் நம் தமிழ்நாட்டிற்கு தான் பெருமையாக இருக்கும்.

தமிழ்நாட்டில் அனைத்து சமூகத்தினரும் சமூக நீதியை அடைய வேண்டும். அதற்காகத்தான் தமிழ்நாடு அரசின் இத்தனை திட்டங்களும், அதை செயல்படுத்த தான் நானும் இருக்கிறேன். அரசு உருவாக்கி தரும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு படியுங்கள்... படியுங்கள்... படியுங்கள்... படிக்கிற காலத்தில் எந்த கவனச் சிதறலும் கூடாது. முயற்சி செய்தவர்கள் தான் வெற்றியை பெற்றுள்ளனர்.

உங்கள் கனவுகளுக்கு பாதை அமைத்துக் கொடுக்க இந்த ஸ்டாலின் இருக்கிறான். வருங்காலத்தில் நீங்கள் அனைவரும் ரோல் மாடலாக மாற வாழ்த்துகிறேன்.

00 Comments

Leave a comment