தமிழ்நாடு

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர்..இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன்..! | Asia hockey cup 2023

சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்ற 7வது ஆசிய ஹாக்கி தொடர் போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தன. இதில் இந்திய மற்றும் மலோசிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

அதன்படி ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். இதில் 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை இந்திய அணி வீழ்த்தியது. இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், குர்ஜந்த், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் 4-வது முறையாக ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

இதையடுத்து ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையை தன் வசப்படுத்திய இந்திய அணி வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்க பதக்கங்களை அணிவித்து கவுரவித்தார். அப்போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வீரர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து ஆசிய சாம்பியன் ஹாக்கி கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க அதனை இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெற்றுக் கொண்டார்... போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மலேசிய அணி வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கங்களை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து இந்திய ஹாக்கி அணி வீரர்களுடன் முதலமைச்சர் உள்ளிட்டோர் குழுபுகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து வாண வேடிக்கைகள் வெடிக்க அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களின் ஆரவாரத்தில் மைதானமே அதிர்ந்தது..

இதனிடையே 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியையே இந்த வெற்றி வெளிப்படுத்தியிருப்பதாக அவர் புகழ்ந்துள்ளார்.

00 Comments

Leave a comment