தமிழ்நாடு

சைலேந்திர பாபுவுக்கு "NO" சொன்ன ஆளுநர்! பின்னணியில் பிரைவேட் கோச்சிங் சென்டர்கள்? | TNPSC Chairman

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி இழுத்தடிப்பதன் பின்னணியில் தனியார் கோச்சிங் சென்டர்கள் சிலவற்றின் எதிர்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி தமிழகத்தில் சுமார் ஓராண்டாக காலியாக இருந்து வருகிறது. தமிழக அரசுப்பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் டிஎன்பிஎஸ்சிக்கு விரைவாக தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவையும், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 7 பேரை நியமிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த பரிந்துரைகளை ஏற்க மறுத்து கோப்புகளை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார். அத்தோடு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுபவர் ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயது வரை மட்டுமே அந்த பதவியில் நீடிக்க முடியும் என்கிற நிலையில் 61 வயதாகும் சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு நியமிக்குமாறு தமிழக அரசு பரிந்துரைத்தது குறித்து சில கேள்விகளுடன் கோப்புகளை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியிருக்கிறதா என்கிற சந்தேகத்தையும் ஆளுநர் எழுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களுக்காக விண்ணப்பங்களை வரவேற்று நாளிதழ்களில் எப்போது விளம்பரம் கொடுக்கப்பட்டது,? எத்தனை விண்ணப்பங்கள் வந்தன? எத்தனை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன? எதன் அடிப்படையில் சைலேந்திர பாபு உள்ளிட்டோரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன? என்கிற கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறும் ஆளுநர் தமிழக அரசை கேட்டுக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புவதாக ஆளுநர் தமிழக அரசிடம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேரந்திரபாபுவை நியமிக்க தனியார் கோச்சிங் சென்டர்கள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமி, ஆபிசர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, சிஐடி நகரில் உள்ள அப்பல்லோ உள்ளிட்ட அரசுப்பணி கோச்சிங் சென்டர்களுக்கு சைலேந்திர பாபு கவுரவ விரிவுரையாளராக சென்று வருவதாகவும் இதன் மூலம் அந்த நிறுவனங்களுடன் சைலேந்திர பாபு நேரடி தொடர்பில் இருப்பதாகவும் ஆளுநருக்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டால் ஒரு சில தனியார் கோச்சிங் சென்டர்களுக்கு சாதகமாக செயல்பட வாய்ப்புள்ளதாகவும் ஆளுநர் ரவியிடம் மற்ற கோச்சிங் சென்டர்கள் தங்களின் கவலைகளை வெளிப்படுத்தயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ் தலைவர் பதவிக்கு நியமிக்காமல் ஆளுநர் இழுத்தடிப்பதாக சொல்லப்படுகிறது.
 

00 Comments

Leave a comment