Also Watch
Read this
திருச்சியில் இன்று மார்ச் 11ஆம் தேதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
கேரளம், திருச்சியில்...
பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வருகிறாா். கேரளம், கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு மாலை 5 மணிக்கு வரும் பிரதமா், விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறாா். முதலில், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே துறைகளின் சாா்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, சுமாா் 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் அடிக்கல் நாட்டியும், கொடி அசைத்தும் தொடங்கி வைக்கிறாா்.

நலத் திட்டங்கள் துவக்கம்
* நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அடிக்கல்
* சென்னை மணலியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் 1,490 கோடி ரூபாய் முதலீட்டிலான மசகு எண்ணை உற்பத்தி ஆலையை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
* பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைக்கிறாா்.
* தேசிய நெடுஞ்சாலை 81ல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல்
* 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமா் கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.

என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம்
இதன் பிறகு, அதே பகுதியின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் மாலை 6.30 மணியளவில், பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறாா். இதில், கூட்டணியின் தமிழக தலைவா் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவா் பாரிவேந்தா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

பலத்த பாதுகாப்பு
பொதுக்கூட்டம் முடிந்ததும் இரவு 7.45 மணியளவில் ஹெலிகாப்டரில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் சென்று, அங்கிருந்து டில்லி புறப்பட்டுச் செல்கிறாா். இதற்காக, ஹெலிகாப்டா்களை தரையிறக்கும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. பிரதமா் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடை உத்தரவை மீறுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் சரவணன் எச்சரித்துள்ளாா். பிரதமா் வருகையை முன்னிட்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையம், விழா நடைபெறும் பஞ்சப்பூா் பகுதி, சுற்றியுள்ள பகுதிகளில் 2,600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved