news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

சவுதி, துருக்கி, பாக். புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் சொல்வது என்ன?

உருவாகிறதா இஸ்லாமிய நேட்டோ?

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மேற்காசியாவில் போர்ப் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் கூட்டாக நேட்டே பாணியில் ராணுவக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?
கூட்டு பாதுகாப்பு (collective security), உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வது (intelligence sharing), ராணுவ ஒருங்கிணைப்பு (military coordination) மற்றும் ஆயுதங்களை கூட்டாக உற்பத்தி செய்வதை (defence co-production) உறுதி செய்யும், மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் கையெழுத்திட்டு உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?

மக்கா கூட்டு பாதுகாப்பு
மக்காவில் உள்ள பெரிய மசூதியை பார்த்தவாறு அமைந்துள்ள அல்-சஃபா அரண்மனையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி, உலகம் உற்றுநோக்கிய முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சவுதி பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அல் சவுத் (Mohammed bin Salman Al Saud), துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) ஆகியோர் மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (Mecca Joint Defence Agreement - MJDA) கையெழுத்திட்டனர்.

3 முக்கிய இஸ்லாமிய நாடுகள்
இந்த முத்தரப்பு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மூன்று முக்கிய முஸ்லீம் நாடுகளை பொருளாதாரம், ராணுவ தரம், அணு ஆயுதம் என்ற மூன்று அம்சங்கள் அடிப்படையில் இணைக்கிறது. வளைகுடாவின் நிதி மூலதனம், துருக்கியின் நேட்டோ தரத்திலான பாதுகாப்புத்துறை தொழில்நுட்பம் மற்றும் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுடன் கூடிய ராணுவம் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் இணைக்கிறது.

கூட்டாக எச்சரிக்கை
ரியாத்(Riyadh), அங்காரா(Ankara) மற்றும் இஸ்லாமாபாத்தில் (Islamabad) ஒரே நேரத்தில் அரசுப்பூர்வமாக வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைகள் ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சங்களை கோடிட்டுக் காட்டுகின்றன. தனிப்பட்ட பாதுகாப்பும் கூட்டுப் பாதுகாப்பும் நாடுகளின் உள்ளார்ந்த உரிமை என்பதை ஐநா சாசனத்தின் 51ஆவது பிரிவு உறுதி செய்கிறது. இந்த பிரிவின் அடிப்படையில் மக்கா முத்தரப்பு கூட்டு ஒப்பந்தத்திற்கு சட்டபூர்வ தன்மை கிடைக்கிறது. மூன்று உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு எதிராக தாக்குதல் அல்லது ஆக்கிரமிப்பு நிகழ்ந்தால், அது 3 நாடுகள் மீது நடத்தப்பட்ட அத்துமீறலாகவே கருதப்படும் என்பதுதான் ஒப்பந்தத்தின் நடுநாயகமான அம்சம். எனவே, எதிரிகளுக்கு கூட்டாக அச்சுறுத்தல் விடும் ஒரு கட்டமைப்பை இந்த ஒப்பந்தம் உருவாக்குகிறது. மூன்று நாடுகளின் பாதுகாப்புத் துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் கூட்டு உற்பத்தியை விரைவுபடுத்துவது, இந்த ஒப்பந்தத்தின் அடுத்த முக்கியமான அம்சம்.

முப்படை ராணுவ கூட்டு பயிற்சி
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை கூட்டாக மேற்கொள்வது, தொழில்நுட்ப பரிமாற்றம், நெறிப்படுத்தப்பட்ட பாதுகாப்புத்துறை கொள்முதல் மற்றும் ஆயுதங்களின் இணை உற்பத்தி ஆகியவற்றை ஒப்பந்தம் சாத்தியமாக்குகிறது. குறிப்பாக ட்ரோன்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், கடற்படைக்கு தேவையான பொறியியல் மற்றும் electronic warfare போன்ற உயர் தொழில்நுட்ப களங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் கூட்டாக மேற்கொள்ளப்படும். உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்வது, கூட்டாக ராணுவச் செயல்பாடுகளை திட்டமிடுவது, ராணுவ தொழில்நுட்ப வல்லுநர்களை பரிமாறிக் கொள்வது, ஒருங்கிணைந்த முப்படை ராணுவ கூட்டுப் பயிற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வழிசெய்கிறது.

தற்காப்புத் தன்மை
இந்த ஒப்பந்தம் முற்றிலும் கறாராக தற்காப்புத் தன்மை கொண்டதாகும். வேறு எந்த ஒரு நாட்டிற்கும் எதிரானது அல்ல. மூன்று நாடுகளும் ஏற்கெனவே பிறநாடுகளுடன் அல்லது தங்களுக்குள் செய்து கொண்டுள்ள இருதரப்பு அல்லது பல தரப்பு உடன்பாடுகளை புதிய ஒப்பந்தம் மீறாது அல்லது பாதிக்காது. இந்த ஒப்பந்தம் குறுங்குழுவாதத் தன்மை கொண்டதோ மதம் சார்ந்த ராணுவக் கூட்டோ அல்ல என சவூதி அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல வெளிப்படையான அணுஆயுதப் பகிர்வு நோக்கமோ அல்லது ஆயுதப் போட்டியைத் தூண்டும் நோக்கமோ கொண்டது அல்ல என்றும் சவூதி அதிகார வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.

நேட்டோ போலவா?
ஏற்கெனவே மேற்கத்திய நாடுகளுக்கு இடையே இப்படி ராணுவக் கூட்டணிகள் உள்ளன. உதாரணமாக, நேட்டோ என்பது அப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தம்தான். இருப்பினும் மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கும், நேட்டோவிற்கும் இடையிலான அமைப்பு ரீதியாகவே முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

மக்கா ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 3 நாடுகளின் கூட்டு பாதுகாப்பு அமைப்பிற்கு centralised, integrated military command structure இல்லை. அதாவது ஒரு மையப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த ராணுவ கட்டளை அமைப்பு என்பது இல்லை. இதேபோல, ஒருங்கிணைந்த சர்வதேச தலைமையகமோ நிலையான நிரந்தரமான கூட்டு படைகளோ இல்லை. அதற்கு பதிலாக, நெருக்கடிகளின் போது படைகளை விரைவாக ஒருங்கிணைத்து, ஒத்திசைந்து செயல்பட வகை செய்யும் ஒப்பந்தமாக மக்கள் முத்தரப்பு உடன்பாடு செயல்படுகிறது.

இந்த ஒப்பந்தம் ஏன்?
மேற்கு ஆசியா முழுவதும் ராணுவ நெருக்கடி பற்றிப் படர்ந்துள்ள வேளையில் மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. முக்கியமான எரிசக்தி முனையங்கள், தொழில்துறை வளாகங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களை குறிவைத்து மீண்டும் மீண்டும் நீண்ட தூர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வளைகுடா நாடுகள் சந்தித்து வருகின்றன. ஹவுதிகளும் தாக்குதலில் இறங்கியுள்ளதால், தெற்கு அரேபிய தீபகற்பத்திலும் போர் அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு கட்டாயம்
ஒரே நேரத்தில், ஹோர்முஸ் நீரிணை, பாப்-அல்-மந்தாப் (Bab-el-Mandeb) மற்றும் செங்கடல் வழியாக கடல்சார் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இது உலகளாவிய பெட்ரோலியச் சந்தைகளை சீர்குலைத்து, கச்சா எண்ணெய் விநியோக முறையின் பலவீனத்தை அம்பலப்படுத்தி உள்ளது. எனவே, அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்களை நம்பியிருப்பதைத் தாண்டி, பாதுகாப்பு கூட்டாண்மைகளை பன்முகப்படுத்த வேண்டிய கட்டாயம் சவூதி அரேபியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பின்னணியில் மக்கா உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது.

புதிய மக்கா ஒப்பந்தம்
அமெரிக்கா, பாரசீக வளைகுடா முழுவதும் கடற்படை மற்றும் விமானப் படை தளங்களை பராமரிக்கிறது. ஆனால், அமெரிக்க நட்பு வளைகுடா நாடுகளோ பாதுகாப்பிற்கு தங்கள் சொந்த ராணுவக் கட்டமைப்புகளை நம்பியிருக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. எனவே மக்கா ஒப்பந்தம், ஏற்கெனவே இருக்கும் குறிப்பிடத்தக்க இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்துகிறது. 2025 செப்டம்பரில் சவுதி-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் - SMDA, கையெழுத்திடப்பட்டது. பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே இருந்த முறைசாரா ராணுவ உதவியை அந்த ஒப்பந்தம் முறைப்படுத்தியது. அண்மையில் பல ஆயிரம் பாகிஸ்தான் வீரர்களை சவூதி அரேபியாவிற்கு அனுப்ப அந்த ஒப்பந்தம் வழிவகுத்தது. ஏற்கெனவே உள்ள அந்த ஒப்பந்தத்தை புதிய மக்கா ஒப்பந்தம் நேரடியாக விரிவுபடுத்துகிறது.

முக்கிய இடம் பிடித்த...
இதேபோல, துருக்கி-பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே ராணுவ மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு உள்ளது. இரு நாடுகளும் கூட்டு ராணுவ திட்டங்களை பல ஆண்டுகளாக விரிவுபடுத்தி வருகின்றன. சவுதி-துருக்கி ஆயுத ஒருங்கிணைப்பும் ஏற்கெனவே உள்ளது. சவுதி அரேபியா துருக்கியுடன் முக்கிய பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தங்களை செய்துள்ளது. துருக்கி வடிவமைத்த, மிக உயரமாக பறக்கக் கூடிய (Bayraktar Akinci) பாய்ரக்தார் அகின்சி ட்ரோன்கள் இதில் முக்கிய இடம்பிடித்துள்ளன.

ராஜதந்திர செல்வாக்கு
மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம், மேற்கு ஆசியா மற்றும் தெற்காசியா தழுவிய வியூக முக்கோணத்தை உருவாக்குகிறது. உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளராகவும், அரபு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் சவுதி அரேபியா உள்ளது. எனவே, நீண்டகால கூட்டணியை தக்க வைக்கத் தேவையான நிதி மூலதனம், உள்கட்டமைப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தை சவூதி அரேபியா வழங்குகிறது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) மற்றும் பரந்த இஸ்லாமிய உலகில் சவூதி அரேபியா நடுநாயகமாக உள்ளதால், ராஜதந்திர செல்வாக்கை உறுதிசெய்கிறது.

ஒரே அணு ஆயத தேசம்
நேட்டோ கூட்டணியின் இரண்டாவது பெரிய ராணுவத்தை கொண்ட துருக்கி, மேம்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறை துறையை தன்வசம் வைத்து உள்ளது. ராணுவச் செயல்பாடுகள் சார்ந்த அனுபவம், தரமான கட்டளை அமைப்புகள் துருக்கி வசம் உள்ளன. துருக்கிய பாதுகாப்பு நிறுவனங்கள் – நவீன கவச வாகனங்கள், கடற்படை போர்விமானங்கள், மின்னணு போர் கருவிகள் மற்றும் ராணுவ ட்ரோன்களை உற்பத்தி செய்கின்றன. இதன் மூலம், மேற்கத்திய ஏற்றுமதி கட்டுப்பாடுகளிலிருந்து சுயேச்சையான மேம்பட்ட உள்நாட்டு ராணுவ தொழில்நுட்பத்தை கூட்டணிக்கு துருக்கி வழங்குகிறது. படை பலம், போர் அனுபவம் மற்றும் முஸ்லீம் உலகில் ஒரே அணு ஆயுத தேசம் என்ற வகையில் பாகிஸ்தான் பங்களிக்கிறது.

"இஸ்லாமிய நேட்டோ"
முக்கிய முஸ்லீம் நாடுகளை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த ராணுவ கூட்டணி என்ற யோசனை நீண்ட காலமாக உள்ளது. 2015ஆம் ஆண்டில் சவுதி அரேபியா ரியாத்தை தலைமையிடமாகக் கொண்டு, 41 நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு இஸ்லாமிய இராணுவ கூட்டணியை Islamic Military Counter Terrorism Coalition - IMCTC நிறுவியது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில், மக்கா முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திட்ட உடனே அது ஒரு "இஸ்லாமிய நேட்டோ" என வர்ணிக்கப்பட்டது.

மாற்று வழி...
ஒருங்கிணைந்த கட்டளை அமைப்பு, தரப்படுத்தப்பட்ட போர்த்தந்திர கோட்பாடு, போர்த் தளவாடங்களை பகிர்ந்து கொள்வதற்கான நெட்வொர்க் மற்றும் நிரந்தர அடிப்படை உள்கட்டமைப்பு நேட்டோவுக்கு எழுபது ஆண்டுகளாக உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் மக்கா ஒப்பந்தம் என்பது ஒரு உயர்மட்ட முத்தரப்பு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தொடக்கப் புள்ளி ஆகும். சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை, இது மேற்கத்திய பாதுகாப்பு குடையின் கீழ் இருப்பதன் நிச்சயமற்ற தன்மையில் இருந்து ஒரு மாற்று வழியை வழங்குகிறது.

பதில் தான் மக்கா ஒப்பந்தம்...
துருக்கியைப் பொறுத்தவரை, இது லாபகரமான ஆயுத ஏற்றுமதி சந்தைகளை உருவாக்குகிறது. மேற்கு ஆசியா முழுவதும் துருக்கியின் புவிசார் அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்துகிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இது முக்கிய பொருளாதார உதவியாகும். மேலும், எரிசக்தி விநியோகத்தில் பாதுகாப்பு கிடைப்பதோடு சர்வதேச கவுரவத்தையும் உறுதி செய்கிறது. இனி வேறு ஏதேனும் இஸ்லாமிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணையுமா? ஒருங்கிணைந்த கட்டளை மையங்கள், கூட்டு ராணுவப் படைகள் உருவாக்கப்படுமா? என்பதற்கான பதில்தான் மக்கா ஒப்பந்தம் ஒரு 'இஸ்லாமிய நேட்டோ'வா? என்ற கேள்விக்கு விடை சொல்லும்.


Related Link
ஆயுதப் பற்றாக்குறையால் போரை நிறுத்தியதா அமெரிக்கா?

ஆயுதப் பற்றாக்குறையால் போரை நிறுத்தியதா அமெரிக்கா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

“DareDevil “அனைவருக்குமான படம் !

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved