Also Watch
Read this
By: Manigandan Raja

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொருக்காம்பட்டி கிராமத்தில், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து சேவையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
கொருக்காம்பட்டியிலிருந்து வடகரை, தென்கரை விலக்கு, சிவலிங்கபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ராஜபாளையம் வரை இயக்கப்படும் இந்த புதிய பேருந்தால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக, இப்பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர், புதிய பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன், தாமும் அந்தப் பேருந்தில் ஏறி பள்ளிக் குழந்தைகளுடனும், பொதுமக்களுடனும் ஒரு பயணியாக அமர்ந்து பயணம் செய்து மகிழ்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் அன்போடு வழங்கிய இளநீரை அருந்திவிட்டு அங்கிருந்து விடைபெற்றார். அதிகாலை 8:00 மணிக்குள் பேருந்து வசதி இல்லாததால், இப்பகுதியைச் சேர்ந்த
ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்குச் செல்ல முடியாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர்.
தற்போது தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதால், இப்பகுதி மக்கள் அமைச்சருக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved