Also Watch
Read this
By: Fyrose Banu

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக பாலமுருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் வெண்ணந்தூர் ஒன்றியம் குட்டலாடம்பட்டி பகுதியில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வரும் நிலையில், புதுப்பாளையம் பள்ளியில் டெப்டேஷன் அடிப்படையில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வீட்டில் இருந்து ஜெல்லி பால் எனப்படும் பொருளை பள்ளிக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதனை சக மாணவர் ஒருவர் உட்கொண்டதாகவும், பின்னர் வீட்டிற்கு சென்ற அந்த மாணவர் தனது பெற்றோரிடம் ஜெல்லி பாலை விழுங்கி விட்டதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக்கு வந்த மாணவரின் பெற்றோர், இதுகுறித்து தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. மேலும், பள்ளியில் அதிகளவு வீட்டுப்பாடம் வழங்கப்படுவதால், தங்களது மகன் வீட்டில் பெற்றோருடன் போதிய நேரம் செலவிட முடியவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்து எந்தவிதமான உணவுப் பொருட்கள் அல்லது பொருட்களையும் பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது என தலைமை ஆசிரியர் அறிவுறுத்தியதுடன், இதனை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவரின் பெற்றோர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததுடன், மாவட்ட ஆட்சியரிடமும் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகன் மாற்றம் செய்யப்பட்டதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதுப்பாளையம் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர், தலைமை ஆசிரியர் பாலமுருகன் பள்ளியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களது குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவியதாக தெரிவித்தனர்.
மேலும், அவரது நடவடிக்கைகளால் தங்களது குழந்தைகள் சிறப்பாக படித்து வருவதாகவும், அவரை வேறு இடத்திற்கு மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பெற்றோர் தெரிவித்தனர். தலைமை ஆசிரியர் பாலமுருகன் மீண்டும் இதே பள்ளியில் பணியாற்ற வேண்டும். இல்லையெனில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி, ஏராளமான பெற்றோர் பள்ளியில் திரண்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved